சென்னை: ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியை தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரியாக மாற்றி அரசு உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டது. அதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. இதனால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்த மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்குறுதிகளை வழங்கியது.
ஆனால் மீண்டும் பழைய மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் வசூல் செய்யப்படும் கட்டணத்தையே செலுத்த வேண்டும் என உயர்கல்வித்துறை அக்டோபர் 26ஆம் தேதி உத்தரவிட்டது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறியுள்ளதாவது," ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கட்டணமாக முதுகலை, சிறப்பு மருத்துவப் படிப்பிற்கு 9.6 லட்சமும், இளங்கலை எம்பிபிஎஸ் படிப்பிற்காக 5.4 லட்சமும், பல் மருத்துவ மாணவர்களுக்கு ரூ 3.5 லட்சமும் கட்டணமாக நிர்ணயம் செய்யப் பட்டிருந்தது.
இது தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை விட மூன்று மடங்கும், அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை விட 30 மடங்கும் அதிகமாகும்.
இந்த கட்டணங்களை, இதர தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக குறைக்க வேண்டும் எனக் கோரி, மாணவர்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் பல கட்டப் போராட்டங்களை நடத்தினர்.
இந்தப் போராட்டங்களுக்கு தி.மு.க உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை சந்தித்து, தி.மு.க இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் `தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் தற்போது பயின்று வரும் மாணவர்களுக்கு, இதர தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக கல்விக் கட்டணம் குறைத்து நிர்ணயிக்கப்படும்’’ என்று உறுதி அளித்தார்.
இப்போராட்டங்களின் விளைவாக, கடந்த ஆட்சியில் 2021 பிப்ரவரி 1ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில், தற்போது பயின்றுவரும் மாணவர்களுக்கு இனிவரும் கல்வியாண்டிற்கான (2021-22) கல்வி கட்டணம் , அரசின் இதர மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டது.
அதே போல் கடந்த ஆட்சியில் 26.2.2021 ல் வெளியிடப்பட்ட அரசாணையில், பழைய வருடத்திற்கான கல்விக் கட்டணத்தை ஏற்கனவே உள்ளது போல் ரூ.9.6 லட்சம் (MD/MS) மற்றும் ரூ.5.4 லட்சம் (MBBS) செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி ,மீண்டும் போராட்டம் நடத்தப்பட்டது. தற்போது தி.மு.க அரசு பொறுப்பேற்றவுடன், மருத்துவ மாணவர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததும், உயர்கல்வித் துறையில் இருந்து சுகாதாரத் துறைக்கு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாற்றப்பட்டு, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளாக செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இக்கல்லூரிகளுக்கு, உயர் கல்வித்துறை புதிதாக ஒரு அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது.
இதில், தற்போது பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இனி வரும் கல்வி ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை, அரசு கட்டணமாக அல்லாமல் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது, கல்வியாண்டு 2018-19 to 2020-2021 MBBS ரூ. 4 லட்சம் , MD/MS ரூ.3.5 லட்சம், BDS ரூ. 2.50 லட்சம், MDS ரூ.3 லட்சம் எனக் கூறப்பட்டுள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த அரசாணையால், மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். பெரும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதால் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, தற்போது படித்து வரும் அனைத்து இள நிலை மற்றும் முது நிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ மாணவர்களுக்கும் இனி வரும் கல்வி ஆண்டுகளுக்கான கல்வி கட்டணத்தை தமிழ்நாடு அரசின் பிற மருத்துவக்கல்லூரிகளுக்கு இணையாக கல்வியாண்டு 2021-22 முதல் MBBS – ரூ.13,600 , MD/MS – ரூ.30,000, BDS- ரூ.11,600, MDS-ரூ.30,000 நிர்ணயித்து வசூலிக்க உத்தரவிடவேண்டும்.
முதுநிலை மருத்துவப் படிப்பை படித்து முடித்தவர்களில் ஒரு சிலர், கடும் பொருளாதார பிரச்னைகளால், கல்விக் கட்டண பாக்கிகளை செலுத்த முடியாமல் சான்றிதழ்களை பெற முடியவில்லை.
முதுநிலை பட்ட படிப்பை தமிழ்நாடு மருத்துவக் கழகத்தில் பதிவு செய்து கொள்ளவும் முடியவில்லை. எனவே கல்விக் கட்டணங்களையும் தமிழ்நாடு அரசு கருணையோடு ரத்து செய்ய வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மக்கள் நல்வாழ்வுத்துறையின்கீழ் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி