சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பாவின் பதவிக் காலம், கடந்த ஏப்ரல் 11ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையொட்டி, புதிய துணைவேந்தரைத் தோ்ந்தெடுப்பதற்காகத் தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்தார்.
தேடுதல் குழு
அதன்படி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் தலைவராகவும், தமிழ்நாடு அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் ஆகியோர் தேடுதல் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
விண்ணப்பங்கள் வரவேற்பு
துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஜூன் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவங்களை www.annauniv.edu என்கிற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை nodalofficer2021@annauniv.edu என்கிற என்ற இணையதளத்தில் சமர்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தர் தேர்வு
விண்ணப்பங்கள் சமர்ப்பித்தவர்களில் தகுதியான நபர்களைத் தேர்வு செய்து, தேடுதல் குழு நேர்முகத் தேர்வு நடத்தும். அதில் தகுதியாக மூன்று நபர்களின் விவரங்கள் ஆளுநரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். அதில் ஒருவரை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துணை வேந்தராக நியமிப்பார்.
இதையும் படிங்க: காற்றில் பரவும் வீரியமிக்க புதிய வைரஸ் கண்டுபிடிப்பு!