கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான நவம்பர், டிசம்பர் மாதத்திற்கான பருவத்தேர்வை மீண்டும் நடத்தும் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அண்ணா பல்கலைக்கழகத்தின் 2020ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதத்திற்கான பருவத்தேர்வை மீண்டும் மறு தேர்வாக நடத்தும் அரசின் முடிவை வரவேற்கிறோம். கடந்த முறை ஆன்லைன் மூலம் நடைபெற்றத் தேர்வில், மாணவர்களின் அறிவுத்திறனை முழுவதும் சோதிக்க முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில், முதலமைச்சரும், உயர் கல்வி அமைச்சரும் மாணவர்களின் கருத்துக்களை நேரில் கேட்டறிந்தனர். இந்த கரோனா தொற்று சூழ்நிலையில் மாணவர்கள் மோசமான தேர்வு முடிவுகளை எதிர்கொண்டுள்ளனர். இந்த அசாதாரண சூழ்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மறு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். இதனை அண்ணாப்பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது.
இது தொடர்பாக முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமியின் தனிப்பட்ட கருத்துக்களுடன், அண்ணாப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் உடன்படவில்லை. அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களை கொள்குறிவகை தேர்வுகளை எழுத தயார் செய்யவில்லை.
வினாத்தாள்களை அமைக்க, எங்கள் ஆசிரியர்களும் பயிற்சி பெறவில்லை. மேலும், இளங்கலை மதிப்பீட்டிற்கான கொள்குறிவகைகள் சம்பந்தப்பட்ட பாடங்களின் முழுமையான கற்றலின் மூலம் மட்டுமே முடியும். எனவே, அரசின் முடிவின்படி முழுமையான தேர்வால் மட்டுமே மாணவர்களின் திறனைக் கண்டறிய முடியும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மாரத்தானை ஸ்தம்பிக்க வைத்த ஆலங்கட்டி மழை... 21 பேர் உயிரிழப்பு!