சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் நேரடியாக கிண்டிப் பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி, கட்டடக்கலைப் பள்ளி ஆகியவையும், 16 உறுப்புக் கல்லூரிகளும் இயங்கிவருகின்றன.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் என ஆசிரியர் பணியிடங்கள் 851 அனுமதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் தற்பொழுது 530 பணியிடங்களில் பேராசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர். 300-க்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக்குழுவில் ஏற்கனவே ஒய்வுபெற்றவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் பணி வழங்குவதற்கு அனுமதி அளித்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக்குழுவின் எண் 255.3இல் ஓய்வுபெற்ற பேராசிரியர்களை மீண்டும் பணியில் சேர்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நியமிக்கப்படுபவர்களுக்கு மாதம் 60 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரையில் சம்பளமாக வழங்கலாம். இந்தத் திட்டத்தில் நியமிக்கப்படும் பேராசிரியர்கள் எண்ணிக்கை 10 விழுக்காட்டிற்கு அதிகமாகச் செல்லக்கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் 2017-18ஆம் ஆண்டு ஆவணத்தில் அனுமதிக்கப்பட்ட 777 பேராசிரியர் பணியிடங்களில் 584 பணியிடங்களில் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 193 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. பணியில் உள்ள பேராசிரியர்களில் முனைவர் பட்டம் முடித்து நிரந்தப்பணியில் 492 பேராசிரியர்களும், 54 பேர் தற்காலிகமாக என 546 பேர் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா கூறுகையில், “தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள் கவுரவ விரிவுரையாளர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎஸ்சி போன்றவற்றில் இந்தமுறை பின்பற்றப்பட்டுவருகிறது. இவர்களுக்கான சம்பளம் தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் திட்டங்களுக்கான நிதியிலிருந்து அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ளவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பணியில் அமர்த்தப்படுகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக்குழுவின் ஒரு லட்சத்து 20 ஆயிரம் சம்பளம் அளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை. ஐஐடி, என்.ஐ.டி. பேராசிரியர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் மிகவும் குறைவாக இருக்கும். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 300 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...விஷத்தை அமிர்தம் போல் மக்களிடம் விதைக்கிறது பாஜக - குஷ்பூ