சென்னை: விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஜூன் 5 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் விளையாட்டு பிரிவில் விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இன்று (மே 25) அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், '2023ஆம் கல்வியாண்டில் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வுக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணக்கர்களுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வருகின்ற 05.06.2023 முதல் 14.06.2023 வரை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான கால அட்டவணை www.tneaonline.org'ல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மாணக்கர்கள் தங்களது பெயருக்கேதிரே கொடுக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நேரடியாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், சான்றிதழ் சரிபார்பிற்கான நாள் மற்றும் நேரம் மாணக்கர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மற்றும் கைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் விளையாட்டு வீரர்கள் தங்களது அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் 2 நகல்களுடன் தேவையான படிவங்களையும் கொண்டு வர அறிவுறுத்தப்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் மாணக்கர்கள் மட்டும் நேரில் வரவேண்டும் மற்ற மாணக்கர்களின் சான்றிதழ் சரிபார்பு இனையதளம் வாயிலாகவே நடைபெறும். விளையாட்டு வீரர்களுக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பி.இ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளை கொண்டுள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் அளித்து வருகிறது. அதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று தமிழ்நாட்டில் 2022-2023ஆம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக் படிப்புகளில், மத்திய அரசின் 5 பொறியியல் கல்லூரிகளும், 11 மாநில அரசின் பொறியியல் கல்லூரிகளும், 3 அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளும், 408 என்ற எண்ணியில் செயல்பட்டுவரும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. இதில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 872 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 5ஆம் தேதி முதல் இணையவழியில் தொடங்கிய பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மே 12ஆம் தேதி முடிவடைந்தது. இந்த நிலையில், பொறியியல் படிப்பில் சேருவதற்கு 91 ஆயிரத்து 38 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், 46 ஆயிரத்து 19 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி உள்ளனர். 17 ஆயிரத்து 618 மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
இதனிடையே இதுகுறித்து சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன், பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்கு, சுமார் 2 லட்சம் இடங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும், இதற்கான கலந்தாய்வை கடந்தாண்டைப் போலவே, ஆன்லைன் மூலம் 4 சுற்றுகளாக நடத்த தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வளர்ச்சிப் பணிகள் மீது தனி கவனம்: மாவட்ட வாரியாக ஐஏஎஸ் நியமனம்..!