அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு ஐந்து அமைச்சர்கள் தலைமையில் குழு அமைத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கக் கூடாது என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. ஆனால் அதே நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்களும் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கும் அதன் பெயரை மாற்றுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அருளறம் கூறுகையில், "அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டதால் மத்திய அரசு சீர்மிகு பல்கலைக்கழகம் என்ற தகுதியை அளித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டடக்கலை தொழில்நுட்ப பள்ளி ஆகியவற்றை இணைத்து சீர்மிகு பல்கலைக்கழக தகுதியை பெறுவதற்கு விண்ணப்பித்தோம், அதனையேற்று மத்திய அரசு இந்தத் தகுதியை வழங்கியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு தகுதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அது ஹைதராபாத் பல்கலைக்கழகம் (சீர்மிகு தகுதி) என்றுதான் அழைக்கப்படுகிறது. அதேபோல் அண்ணா பல்கலைக்கழகம் சீர்மிகு தகுதிபெற்றது என்றுதான் போட வேண்டும் என்பது அனைத்து ஆசிரியர்களின் கருத்தாக உள்ளது.
மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றம்செய்து அரசு கொண்டுசெல்லும் என நாங்கள் கருதவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தினை மண்டல அளவில் பிரித்தபோது அதற்குத்தான் பெயர் மாற்றினர். அப்போதுகூட சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் அப்படியே தொடர்ந்து இருந்தது.
அண்ணா பல்கலைக்கழகம் பல்வேறு ஆராய்ச்சிகள் சர்வதேச அளவில் குறிப்பிட்ட தரத்தினை பெற்றுள்ளது. அதன் பெயரை மாற்றினால் சர்வதேச அளவில் அதற்குரிய தரம் குறைய வாய்ப்புள்ளது.
சர்வதேச அளவில் 500 பல்கலைக்கழகங்கள் ஒரு பல்கலைக்கழகமாக வர வேண்டும் என்பதற்காகத்தான் சீர்மிகு தகுதி அளிக்கப்படுகிறது. எங்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரில்தான் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை எடுத்தால் அதன் தரம் குறையும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் சமீபத்தில் மாணவர்களுக்கான சேர்க்கை கட்டணத்தை உயர்த்தி உள்ளோம். தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டணம் குறைவாக உள்ளதால்தான் இங்கு சேர்ந்து படிக்கின்றனர். கட்டணத்தை உயர்த்தினால் பல்வேறு தரப்பட்ட மாணவர்களுடன் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களும் படிக்கும் வாய்ப்பை இழப்பார்கள்.
மாணவர்களுக்கான கட்டணத்தை உயர்த்திதான் பல்கலைக்கழகத்தை நடத்த வேண்டுமென்றால் சீர்மிகு தகுதி தேவையில்லை என ஆசிரியர்கள் கூறுவதற்கு வாய்ப்புள்ளது. இடஒதுக்கீட்டினைப் பொறுத்தவரை எந்தவித பாதிப்பும் ஏற்படாது என துணைவேந்தர் கூறிவருவதை நாங்கள் நம்புகிறோம்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளுக்கான அங்கீகார கட்டணம், தேர்வுக் கட்டணம் போன்றவற்றின் மூலம் பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது. எனவே அரசு புதிதாக ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கினாலும் அண்ணா பல்கலைக்கழகத்தை நடத்துவதற்கு தேவையான நிதியினை அளிக்க வேண்டும். அவ்வாறு அரசு நிதியுதவி அளிக்காவிட்டால் பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கும் வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படியுங்க: 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் - கல்வியாளர்கள்