கரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் இறுதியாண்டு மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு மாணவர்களுக்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதி பருவத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கான துணைத்தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 17 முதல் 21ஆம் தேதி வரை நடைபெறும் இத்தேர்வினை 21 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
முன்னதாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆன்லைன் மூலம் இளநிலை மற்றும் முதுகலை இறுதியாண்டு பருவத்தேர்வு முடிவுகள், கடந்த மாதம் 18ஆம் தேதி வெளியிடப்பட்டன. இது குறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் கூறும்போது, " இறுதி பருவத்தேர்வு எழுதாத 21 ஆயிரம் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடைபெறவுள்ள இந்தத் தேர்வு, 30 மதிப்பெண்களுக்கு 1 மணி நேர அளவில் நடத்தப்படும்.
ஆன்லைன் வழியில் நடைபெற்ற தேர்வின்போது ஆள்மாறாட்டம் செய்தும், விடைகளை கேட்டு எழுதியும், டீக்கடைகளில் அமர்ந்து கொண்டும் எழுதியதாக புகார் எழுந்தது. அத்தகைய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் தான், முடிவுகள் அறிவிக்கப்படும் " என்றார்.
இறுதி பருவத்தேர்வெழுத அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் உட்பட ஒரு லட்சத்து 51 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இந்த மாணவர்களுக்கு ஒவ்வொருப் பாடப்பிரிவிலும் தேர்வு எழுதும் பாடத்தாள்களின் எண்ணிக்கை மாறுபடும். அதனடிப்படையில் 1 லட்சத்து 15 ஆயிரம் மாணவர்கள் 4 லட்சத்து 19 ஆயிரத்து 214 தேர்வுகளை ஆன்லைன் மூலம் எழுத வேண்டும். அவர்களில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 397 தேர்வு தாள்களை மாணவர்கள் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரியர் தேர்வு விவகாரம் : வெளியிட்ட முடிவுகளை உடனடியாக திரும்பப்பெற கோரி மனு!