சென்னை: தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கரோனாவால் பல்கலைக் கழகங்களில் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்துவது குறித்து அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடனும் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினேன். அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2017ஆம் ஆண்டு பாடத்திட்டத்தில், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புத் தேர்வுகள் வரும் ஜுன் 14ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் நடைபெறும். மேலும், 2013ஆம் ஆண்டு பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய இளங்கலை மாணவர்களுக்கான தேர்வும் ஜுன் 14ஆம் தேதி தொடங்கும். மற்ற பாடத்திட்டங்களில் தேர்வு எழுதிய மாணவர்களுக்குத் தேர்வு ஜுன் 21ஆம் தேதி தொடங்குகின்றது.
ஏற்கெனவே தேர்வெழுதிய மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத விரும்பினால் பணம் கட்டத் தேவை இல்லை. கரோனா காலத்திற்கு முன்பு தேர்வுக்குப் பணம் கட்டாமல் இருந்த மாணவர்கள் இன்று முதல் அடுத்த மாதம் 3ஆம் தேதிக்குள் தேர்வு கட்டணத்தைச் செலுத்தி தேர்வில் கலந்து கொள்ளலாம். அண்ணா பல்கலைக்கழகம் தவிர, மற்ற பல்கலைக்கழங்களில் ஜுன் 15ஆம் தேதி தொடங்கி ஜுலை 15ஆம் தேதிக்குள் தேர்வுகள் முடிக்கப்படும். ஜுலை 30ஆம் தேதிக்குள் அனைத்துப் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகளை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: கேரள சட்டப்பேரவையில் ஒலித்த தமிழ்க் குரல்!