சென்னை: இங்கிலாந்து நாட்டில் உள்ள 10 பல்கலைக்கழகங்களுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள், பொறியியல் படிப்பிற்கு இடையே இங்கிலாந்து சென்று ஓராண்டு காலம் படிப்பதற்கான புதிய வழிமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதற்கான வழிமுறைகளை உருவாக்குவது குறித்து இங்கிலாந்து நாட்டில் உள்ள 10 பல்லைக்கழக பிரதிநிதிகளுடன் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், வேல்ஸ் பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழகம், பிரிமிங்காம் பல்கலைக்கழகம் என லண்டனில் உள்ள 10 முன்னணி பல்கலைக்கழகங்களுடன் இன்று (செப்.21) ஆலோசனையை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டது.
அதன் அடிப்படையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நான்காண்டு பொறியியல் படிப்பின்பாேது, இடையே இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஓராண்டு காலம் முதல் இரண்டு ஆண்டு காலம் வரை சென்று அங்கு பயிலவும், பயிற்சிகளை பெறவும் வழிவகை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
செமஸ்டர் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களில் விருப்பம் உள்ள மாணவர்களை லண்டன் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புவதே அண்ணா பல்கலைக்கழகத்தின் நோக்கமாகும். அதேநேரம், லண்டனில் பயிலும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வரவும் வழிவகை செய்யப்பட உள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் கூறும்போது, "இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் ஏற்கனவே பொறியியல் படிப்பின் இடையில் படிப்பதற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அந்த எண்ணிக்கையை ஆண்டிற்கு 50 முதல் 60 மாணவர்களாக அதிகரிக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
பொறியியல் மாணவர்கள் உலகளாவிய பல தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதற்கு பொறியியல் படிக்கின்றபோதே இங்கிலாந்து சென்று பயில்வது அவர்களுக்கு பெரிதாக உதவும். அதேபோல் அங்கு இருக்கின்ற மாணவர்களும் இங்கு வந்து படிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இங்கிலாந்து கல்வியாளர் ஸ்டீவ் ஸ்மித் கூறும்போது, "அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துகின்றபோது, அது இரு நாட்டு உறவுகளை மேம்படுத்த உதவும். மேலும், உலக தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும்" தெரிவித்தார்.
இதையும் படிங்க: "நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி, கண்துடைப்புக்காக நடத்தப்படும் தேர்வு" - வைகோ விமர்சனம்!