சென்னை: 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தால் நடத்தப்பட்டது. இந்த கலந்தாய்வில் 442 கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்து 19 ஆயிரத்து 346 இடங்களில் ஒற்றைச் சாளர முறையில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 780 கலந்தாய்வின் மூலம் நிரப்ப அனுமதிக்கப்பட்டன.
அதில், 80 ஆயிரத்து 951 மாணவர்கள் பொதுப்பிரிவிலும், 8 ஆயிரத்து 475 மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டிலும் சேர அனுமதி அளிக்கப்பட்டது. பி.இ, பி.டெக் பொறியியல் சேர்வதற்கான கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், 11 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவரும் சேரவில்லை. 442 கல்லூரியில் 263 கல்லூரிகளில் 50 விழுக்காட்டிற்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர்.
மேலும், 61 கல்லூரியில் 10 விழுக்காட்டிற்கும் குறைவான மாணவர்களும், 37 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலும் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். நடப்பாண்டில், 50 ஆயிரத்து 514 இடங்கள் காலியாக உள்ளது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறும்போது, “அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற 75 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கங்களைப் பெற்றுள்ளோம்.
அதன் அடிப்படையில் தற்போது, அண்ணா பல்கலைக்கழக குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆய்வுகள் அனைத்தும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. உட்கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லாத இந்த கல்லூரிகளுக்கு மீண்டும் இணைப்பு அங்கீகாரம் வழங்க வேண்டுமா? என்பது குறித்து முடிவை எடுப்போம். உட்கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லை எனக் கருதினால் வரும் கல்வியாண்டில் இணைப்பு அங்கீகாரம் வழங்க மாட்டோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் கவனத்திற்கு..! இனி இது கட்டாயமாம்! பத்திரப் பதிவுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!