பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில்,
"இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கு நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி 13ஆம் தேதி முதல் மார்ச் 2ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் மாதிரித் தேர்வுகள் ஜனவரி 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான தேர்வுகள் பிப்ரவரி 13ஆம் தேதி முதல் மார்ச் 2ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.
தினமும் 5 பிரிவுகளாக தேர்வுகள் நடைபெறுகிறது. காலையில் 8 மணி முதல் 9 மணி வரையும், காலை 10 மணி முதல் 11 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 3 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையும் என 1 மணி நேர ஆன்லைன் மூலம் பருவத்தேர்வு நடைபெறும். மாணவர்கள் ஆன்லைன் தேர்வில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆன்லைன் தேர்வில் பங்கேற்க இயலாமல் போனால், நேரடி எழுத்துத் தேர்வு மாணவர்களுக்கு நடத்தப்படும். லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப், கம்ப்யூட்டர் மூலம் தேர்வு எழுதலாம். 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, அது 100 மதிப்பெண்ணுக்கு மாற்றப்படும்.
மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு தொடங்கியவுடன் அவரின் கணினியில் கவுண்டவுன் ஆரம்பிக்கும். ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்திலும், தமிழ் வழி மாணவர்களுக்கு ஆங்கிலம், தமிழிலும் கேள்வித்தாள் இருக்கும். மாணவர்கள் தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.
ஆன்லைன் தேர்வு எழுதும்போது, மாணவர்கள் அவர்களுடன் வேறு யாரையும் அமர வைக்கக் கூடாது. தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் கல்லூரியின் அடையாள அட்டையை அணிவதுடன், அரசின் அடையாள அட்டையும் சமர்பிக்க வேண்டும். தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.