சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பினை வழங்கி வரும் கல்லூரிகள் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்கழகத்தின் அனுமதியையும், அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தையும் ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கைக்கு முன்னர் பெற வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் 2022-23 கல்வியாண்டில் பி.இ, பி.டெக், பி.ஆர்க். எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான், எம்.சி.ஏ ஆகிய தொழில் கல்விப்படிப்புகளை நடத்தும் கல்லூரிகள் ஜன.10ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதி வரையில் அபராதம் இல்லாமலும், மே 7ஆம் தேதி வரையில் 50ஆயிரம் ரூபாய் அபராத்துடனும் விண்ணப்பங்களை பெற்றது.
அதனைத் தொடர்ந்து பேராசிரியர்கள் குழு அமைக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கல்லூரியின் கட்டமைப்புகள் கூகுள் மேப் மூலமாக ஆய்வு செய்யப்பட்டது. அப்போது ஆசிரியர்கள் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கழகத்தில் பதிவு செய்த எண், ஆதார் விபரம், பான் எண் போன்றவையும், சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டன.
அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் கழகத்தின் விதிமுறைகளின் படி தகுதியான பேராசிரியர்கள், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தகுதியான ஆசிரியர்கள் ஆய்வகங்கள் மற்றும் உபகரணங்கள் போன்ற கல்லூரிகள் இணைப்பு நீட்டிப்பைப் பெற இரண்டு வாரங்களுக்குள் முரண்பாடுகளை சரி செய்து அறிக்கையளிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
கரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கல்லூரிகள் தரும் தகவல் அடிப்படையில் மாணவர்கள் சேர்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான இணைப்பு நீட்டிப்பிற்கு விண்ணப்பம் செய்த 476 கல்லூரிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 225 கல்லூரிகள் 50 சதவீதத்திற்கும் அதிகமான குறைபாடுகள் உள்ளது. 62 கல்லூரிகள் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையில் குறைபாடு உள்ளன.
தகுதியற்ற முதல்வர்களைக் கொண்டு 23 கல்லூரிகள் செயல்படுகின்றன. 166 கல்லூரிகளில் குறைபாடுகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டலத்தில் 69 கல்லூரிகளும், கோயம்புத்தூர் மண்டலத்தில் 81 கல்லூரிகளும், திருச்சி மண்டலத்தில் 25 கல்லூரிகளும், மதுரை மண்டலத்தில் 20 கல்லூரிகளும், திருநெல்வேலி மண்டலத்தில் 30 கல்லூரிகளும் 50 சதவீதம் அளவிற்கு கூட போதுமான உட்கட்டமைப்புகளை பெற்றிருக்கவில்லை.
இந்தக் கல்லூரிகள் தங்களின் விளக்கத்தை ஜூலை மாதம் இறுதிக்குள் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியப் பின்னர் தான் அவர்கள் கேட்ட அளவிற்கு மாணவர்கள் சேர்க்கை இடங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பட்டமளிப்பு விழா: அங்கி அணிய வைத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த உதயநிதி!