பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பிற்கான சிறப்பு பிரிவினருக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடைபெற்ற கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 98 மாணவர்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 122 மாணவர்களும், விளையாட்டு பிரிவில் 277 மாணவர்கள் என 497 பேர் இடங்களை தேர்வு செய்தனர். அதேபோல் அக்டோபர் 8 முதல் 28ஆம் தேதி வரை தொழிற்கல்வி மற்றும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 4 கட்டங்கள் முடிவடைந்த நிலையில் 70 ஆயிரத்து 698 மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்துள்ளனர்.
சிறப்பு பிரிவுக் கலந்தாய்வில் 497 மாணவர்கள் உட்பட 71 ஆயிரத்து 195 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்தனர். 460 கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 63 ஆயிரம் இடங்களில் 91 ஆயிரத்து 805 இடங்கள் காலியாக உள்ளன. பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வில் 13 கல்லூரிகளில் மட்டுமே 100 விழுக்காடு மாணவர்கள் இடங்களை தேர்வு செய்தனர்.
50 விழுக்காட்டிற்கும் கீழ் 322 கல்லூரிகளிலும், 25 விழுக்காட்டிற்கு கீழ் 194 கல்லூரிகளிலும், 10 விழுக்காட்டின் கீழ் 64 கல்லூரிகளிலும், 5 விழுக்காட்டின் கீழ் 64 கல்லூரிகளிலும், 1 விழுக்காடு கீழ் 30 கல்லூரிகளிலும், 20 கல்லூரிகளில் ஒரு மாணவர்கள் கூட சேரவில்லை.
அண்ணாப் பல்கலைக் கழகத்தின் 3 வளாக கல்லூரியிலும் 100 விழுக்காடு இடங்கள் நிரம்பியுள்ளன. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 61 விழுக்காடு இடங்கள் நிரம்பி உள்ளன. ஆனால் அண்ணாப் பல்கலைக் கழகத்தால் நடத்தப்படும் 16 உறுப்புக்கல்லூரிகளில் 8 கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்கள் கூட நிரம்பவில்லை.
இதுதொடர்பாக கல்வி ஆலோசகர் அஸ்வின் கூறியதாவது, "தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மாணவர்கள் குறைவான எண்ணிக்கையில் பொறியியல் படிப்பினை தேர்வு செய்துள்ளனர். மொத்தமுள்ள இடங்களில் 50 விழுக்காட்டுக்கு மேல் காலியாக உள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு 6ஆயிரத்து 20 மாணவர்கள் குறைவாக இடங்களை தேர்வு செய்துள்ளனர்.
அண்ணாப் பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரிகளான தஞ்சாவூர், திண்டுக்கல், அரியலூர்,ராமநாதாபுரம், நாகப்பட்டிணம் ஆகியவற்றில் 30 விழுக்காடு இடங்கள் நிரம்பவில்லை. ஒரு கல்லூரியினை மாணவர்கள் தேர்வு செய்யும் போது வேலை வாய்ப்பினைத் தான் எதிர்பார்க்கின்றனர். கல்லூரிகளில் தேர்ச்சி விழுக்காடு வேலை வாய்ப்பு முகாமில் தேர்வடையும் நிலையில் இருப்பது இல்லை. அது போன்ற கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வு செய்யவில்லை" என்றார்.
இதையும் படிங்க: பசுங்கன்றை காரில் கடத்திய கள்வர்கள்: மதுரையை கலக்கும் சுவாரஸ்யம்