சென்னை தலைமை செயலகத்தில், அண்ணா பல்கலைகழக புதிய துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ள வேல்ராஜ், தமிழ்நாடு முதலமைச்சரை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள வேல்ராஜ் பதவியேற்புக்கு முன்பாக முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அண்ணா பல்கலைக்கழகத்தை சர்வதேச அளவில் உயர்த்துவதோடு, கல்வி ஆற்றலையும் அதிகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். தொழில்கல்வி மற்றும் சமூக சேவைக்கான மாணவர்களை உருவாக்கும் வகையில் பாடத்திட்டம் இருக்க வேண்டும். அதேபோல், ஆராய்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை சர்வதேச அளவில் உருவாக்க வேண்டும்.
வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு தேவையான மாணவர்களை உருவாக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என துணை வேந்தர் உறுதியளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தை பன்னாட்டு பல்கலைக்கழகமாக உயர்ந்த தரத்தில் புதிய துணைவேந்தர் உருவாக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படுகின்றன. கல்லூரிகள் திறப்பது தொடர்பாக சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவு செய்யப்படும்” என்றார்.