சென்னை: ஒரகடத்திலுள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் பணியாளர்கள் தரமற்ற உணவை உட்கொண்டதால் இறந்துவிட்டதாகத் தகவல் பரவியதையடுத்து, பிற தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
அவ்விசாரணையின் அடிப்படையில், திருச்சியைச் சேர்ந்த ‘சாட்டை துரைமுருகன்’ மீது வன்முறையைத் தூண்டுதல், அவதூறு செய்தி பரப்புதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, ஜனவரி 19ஆம் தேதி இரவு அவரைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.
மேலும், துரைமுருகனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைதுசெய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்துசெய்யக் கோரி சாட்டை துரைமுருகன் மனு தாக்கல்செய்தார். இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் மீதான இந்த வழக்கின் அடிப்படையில்தான் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்படுள்ளதாகத் தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக காவல் துறை பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை பிப்ரவரி 16ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: நீதிமன்றங்களில் பிப்.7 முதல் மீண்டும் நேரடி விசாரணை!