முடிச்சூர் பகுதியிலிருந்து தாம்பரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதைக் கண்ட பிற வாகன ஓட்டிகள் உடனே அவரின் அருகே சென்று பார்த்தபோது, அந்நபர் மதுபோதையில் வாகனத்திலிருந்து கீழே விழுந்தது தெரியவந்தது.
பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கும், 108 ஆம்புலன்ஸுக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து சம்பவ இடம் வந்த 108 ஆம்புலன்ஸில் இருந்த செவிலியர் அவருக்கு முதல் உதவி செய்தனர். அதன்பிறகு மதுபோதையில் இருந்தவரிடம் காவல் துறையினர் விசாரித்தனர். விசாரித்ததில், அவர் சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த முருகேசன் எனவும், கால்நடைத் துறை அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார் எனவும்
இதையடுத்து முருகேசனின் நண்பருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, நண்பரின் வாகனத்தில் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பல இடங்களில் மதுக்கடைகள் மூடி இரண்டு நாளாகியும் முடிச்சூர் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை தொடர்வதாகவும், அதனால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்பவர்களைக் கண்டறிந்து காவல் துறை நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்கலாம் என்று கூறுகின்றனர்.