இதுகுறித்து அந்த அறிக்கையில், மருத்துவப் படிப்பின் தரத்தை நீட் தேர்வு உயர்த்தும் என்பதும், மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை நீட் தடுக்கும் என்பதும் அழகாக சித்தரிக்கப்பட்ட அபத்தங்கள் என்பதை மீண்டும் ஒருமுறை புள்ளிவிவரங்கள் நிரூபித்திருக்கின்றன. நீட் தேர்வில் பாடவாரியாக தகுதி மதிப்பெண் எடுக்கமுடியாத மாணவர்கள் கூட மருத்துவப் படிப்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர் என்பது இதைத்தான் காட்டுகிறது.
2018-ஆம் ஆண்டு நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை விவரங்களை ‘‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ பகுப்பாய்வு செய்துள்ளது. அதில் நீட் தேர்வில் இயற்பியல் அல்லது வேதியியல் பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண்களும், மைனஸ் மதிப்பெண்களும் எடுத்த 50 பேர் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. அவர்களில் 7 பேர் இந்த இரு பாடங்களில் ஏதோ ஒன்றில் சுழியம் (0) மதிப்பெண் மட்டுமே எடுத்துள்ளனர். 10 பேர் மைனஸ் மதிப்பெண் எடுத்துள்ளனர். இயற்பியல் பாடத்தில் 180 மதிப்பெண்களுக்கு மைனஸ் 25 மதிப்பெண், அதாவது சுழியத்தை விட 25 மதிப்பெண் குறைவாகவும், வேதியியலில் 10 மதிப்பெண்ணும் எடுத்த ஒரு மாணவர் உயிரியலில் 185 மதிப்பெண் எடுத்ததால் மொத்தம் 170 மதிப்பெண் எடுத்து மருத்துவம் படிக்கிறார்.
மற்றொரு மாணவர் இயற்பியலில் சுழியம் மதிப்பெண், வேதியியலில் 15, உயிரியலில் 85 என மொத்தம் 100 மதிப்பெண்களுடன் மருத்துவ மாணவராகியிருக்கிறார். அதாவது நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 100 மதிப்பெண், வெறும் 13.88% மதிப்பெண், பெற்றால் மருத்துவம் சேர முடிகிறது. 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் இந்த மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற முடியாது. ஆனால், நீட் தேர்வில் 13%-க்கும் குறைவான மதிப்பெண் பெற்றால் கூட தேர்ச்சி பெறுவதுடன் மருத்துவப் படிப்பில் சேரவும் முடிகிறது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமல்ல.... தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே நிலையே தொடருகிறது.
2018-ஆம் ஆண்டில் மட்டுமல்ல... அதற்கு முந்தைய ஆண்டிலும் இதே நிலைமை தான். 2017-ஆம் ஆண்டில் நீட் தேர்வில் 150க்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்ற 1990 பேர் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 530 பேர் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண்கள் எடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வை அறிமுகம் செய்வதற்காக மத்திய அரசின் சார்பில் கூறப்பட்ட இரு முக்கியக் காரணங்கள், நீட் தேர்வு வந்தால் மருத்துவக் கல்வியின் தரம் உயரும், மருத்துவக் கல்வி வணிகமாவது தடுக்கப்படும் என்பது தான். நீட் தேர்வில் 13.88% மதிப்பெண் பெற்றவர்களுக்கெல்லாம் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கிறது என்பதிலிருந்தே அந்த வாதம் அபத்தமானது என்பது உறுதியாகி விட்டது. நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வணிகமயமாவதையும் தடுக்க முடியவில்லை என்பதும் 100% உண்மையாகும். இதை நிரூபிப்பதற்கும் ஏராளமான புள்ளி விபரங்களை எடுத்துக்காட்ட முடியும்.
நடப்பாண்டில் இந்தியா முழுவதும் சுமார் 65,000 மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளன. ஆனால், இந்த ஆண்டில் நீட் தேர்வு எழுதிய 14 லட்சத்து 10 ஆயிரத்தி 755 பேரில் 7 லட்சத்து 97 ஆயிரத்தி 042 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நியாயமான முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால், இவர்களில் முதல் 65,000 இடங்களைப் பெற்றவர்களுக்கு மட்டும்தான் இடம் கிடைக்க வேண்டும். ஒருவேளை இடஒதுக்கீட்டுக் கணக்கின்படி பார்த்தாலும் முதல் ஒரு லட்சம் இடங்களுக்குள் வந்தவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி சாத்தியமாக வேண்டும்.
ஆனால், முதல் 50 ஆயிரம் இடங்களுக்குள் வந்தவர்களுக்குக் கூட இடம் கிடைப்பதில்லை; அதேநேரத்தில் 7 லட்சத்திற்கு அதிகமான தரவரிசையில் வந்தவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கிறது. இதற்குக் காரணம் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஓராண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவது தான். நீட் தேர்வில் 60% மதிப்பெண் பெற்றவர்களில் பலர் அந்தக் கட்டணத்தைக் கட்ட முடியாமல் விலகிக் கொள்ள, கோடிகளை குவித்து வைத்திருக்கும் பலர் 15 விழுக்காட்டுக்கும் குறைவான மதிப்பெண்களை மட்டுமே எடுத்திருந்தாலும், பணத்தைக் கட்ட முடியும் என்பதால் மிக எளிதாக சேர்ந்து விடுகின்றனர். மொத்தத்தில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு மருத்துவப் படிப்புக்கு கோடிகளைக் கொட்டும் மாணவர்களைப் பிடித்துத் தரும் வேலையைத் தான் நீட் தேர்வு செய்கிறது.
இந்தியா முழுவதும் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு 3 ஆண்டுகள் ஆகி விட்டன. மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துகிறது; கல்வி வணிகமாவதைத் தடுக்கிறது என்று நீட்டுக்கு பொய்யான புகழாரங்களைச் சூட்டி மக்களையும், மாணவர்களையும் மத்திய அரசு இனியும் ஏமாற்ற வேண்டாம். கடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை விவரங்களின் அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய சமூகநீதியில் அக்கறை கொண்ட வல்லுனர் குழுவை அமைக்க வேண்டும். அக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் நீர் தேர்வை ரத்து செய்வது பற்றி முடிவெடுக்க வேண்டும். இதைச் செய்ய மத்திய அரசு தவறும் பட்சத்தில் நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தமிழக அரசு, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சிறப்பு மனுவைத் தாக்கல் செய்து நீட் தேர்வை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.