தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, மே 10 ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கை முன்னிட்டு, இன்றும், நாளையும் அனைத்து கடைகள், நிறுவனங்கள் இரவு 9 மணி வரை இயங்கும்.
ஊரடங்கு நாள்களில் உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. சென்னை, பிற மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்கள் ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து செயல்பட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், முழு ஊரடங்கை அறிவித்த மு.க. ஸ்டாலினுக்கு ட்விட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. இது பயனுள்ள நடவடிக்கை.
தமிழ்நாடு அரசு அளித்துள்ள ஊரடங்குக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கரோனாவிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள இது தான் சிறந்த வழி. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும். முழு ஊரடங்கு காலத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அவர்களுக்கு நடப்பு சுழற்சிக்கான இரு மாத மின்சாரக் கட்டணத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும். இது கடந்த காலத்தில் திமுகவும் வலியுறுத்திய கோரிக்கை தான். ஊரடங்கால் வாழ்வாதாரம் இழக்கும் முடி திருத்துவோர், வாடகை வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத் தொழில் பிரிவினருக்கும் சிறப்பு நிவாரணத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.