சென்னை: குரூப்-4 தேர்வு முடிவுகள் தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு 7,301 பேரை தேர்வு செய்வதற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 24ம் தேதி நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிக்கையின்படி, கடந்த அக்டோபர் மாதம் தேர்வு முடிவு வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அதே மாதம் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இது எதுவுமே நடக்கவில்லை.
இதற்கிடையே, குரூப்-4 பணியிடங்களின் எண்ணிக்கை 9,801 ஆக உயர்த்தப்படுவதாக கடந்த ஜனவரி மாத இறுதியில் அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் முடிவுகள் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்தது. ஆனால் எப்போது முடிவுகள் வெளியாகும் என்பது யாருக்கும் தெரியவில்லை. தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாதது அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் படுதோல்வி. மாணவர்களின் எதிர்காலம் குறித்த விஷயத்தில், தேர்வாணையம் அலட்சியமாக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 31.01.2023 நிலவரப்படி, 67 லட்சத்து 58 ஆயிரத்து 698 ஆகும். பதிவு செய்யாதவர்களையும் கணக்கில் கொண்டால் இந்த எண்ணிக்கை ஒன்றரை கோடியை தாண்டும். அரசுப்பணி என்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக உள்ளது.
குரூப்-4 பணிகளுக்கான போட்டித் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் ஓர் அடுக்கு கொண்ட போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடுவதில் தொடங்கி பணி நியமன ஆணை வழங்குவது வரையிலான அனைத்து நடைமுறைகளும் 5 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும்.
ஈரடுக்கு தேர்வு கொண்ட முதல் மற்றும் குருப் 2 பணிகளுக்கான அறிவிக்கை வெளியிடுவதில் தொடங்கி, நியமன ஆணை வழங்குவது வரையிலான அனைத்து நடைமுறைகளும் 9 மாதங்களில் முடிக்கப்படுவதை அரசுப் பணியாளர் தேர்வாணையம் உறுதி செய்ய வேண்டும்.” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் 'குப்பையில்லா பகுதிகள்' திட்டம்.. எங்கெல்லாம் அமல்?