இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு இருக்கும் நிலையில் மத்திய உள்துறைச் செயலர் அஜய்குமார் பல்லாவுக்கு தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறை செயலர் குருபிரசாத் மகோபாத்ரா எழுதியுள்ள கடிதத்தில், ”இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தவும், மக்களின் கைகளில் பணம் புழங்குவதை உறுதி செய்யவும் உர ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகள் உள்ளிட்ட 16 வகையான தொழிற்சாலைகளை இயக்க வசதியாக ஊரடங்கு ஆணையிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
தொழில் மற்றும் வணிகம் சார்ந்த பெரும்பான்மையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்றும் யோசனை வழங்கியுள்ளார். இவை தவறான நேரத்தில் முன்வைக்கப்படும் மிகத் தவறான யோசனைகள் ஆகும். இந்தக் கோரிக்கைகளை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கக் கூடாது. அவசரப்பட்டு 16 வகையான தொழிற்சாலைகளை திறக்க அனுமதித்தால், அதன்மூலம் எந்த அளவுக்கு பொருளாதாரப் பயன்கள் கிடைக்குமோ, அதை விட 5 மடங்குக்கும் கூடுதலான பொருளாதார வீழ்ச்சி நோய்ப்பரவல் காரணமாக ஏற்படும் என்பதை அரசு உணர வேண்டும்.
இந்தியாவுக்கு இன்றைய சூழலில் உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் தான் மிகவும் அவசியமாகும். பொருளாதார நடவடிக்கைகள் குறித்து சிந்திப்பதற்கான தருணம் இன்னும் கனியவில்லை. எனவே, உணவு, விவசாயம், மருந்து உற்பத்தி, விநியோகம் போன்ற அத்தியாவசிய தேவைகள் தவிர மீதமுள்ள எந்தவிதமான தொழிற்சாலைகளையும் இயக்க மத்திய அரசு அனுமதியளிக்கக் கூடாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.