கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து களம் கண்ட பாமகவின் முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழியப்பட்டவர், மருத்துவர் அன்புமணி ராமதாஸ். அவரின் 'மாற்றம், முன்னேற்றம், அன்புமணி' என்ற முழக்கத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் தேர்தல் பரப்புரையிலிருந்து கடன் வாங்கப்பட்டிருந்தாலும் பாமக தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், கட்சியின் ஆதரவு தளத்தை தக்கவைத்துக்கொள்வதையும் நோக்கமாக கொண்ட அந்த முழக்கம் பெருமளவு கை கொடுத்தது. அந்தத் தேர்தலில் பாமக 5.3% வாக்குகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
குறிப்பாக, தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்த அன்புமணியால் பென்னாகரம் தொகுதியில்கூட வெல்ல முடியவில்லை. இது தேர்தல் அரசியல் களத்தில், அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அப்போதிருந்து, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸின் 'மாற்றம், முன்னேற்றம்' என்ற டேக் லைன் படிப்படியாக மறைய ஆரம்பித்தது.
இதனைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கு செல்வாக்கு மிகுந்த தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் அவர் தோல்வியைத் தழுவினார்.
'இந்த தோல்விகள் காரணமாக அன்புமணியே தனது லட்சியத்தை மாற்றியிருக்க வேண்டும். தமிழ்நாடு அரசியலில் உயரிய இடத்தைத் தக்க வைக்க வேண்டிய அவசியமே, மாநிலங்களவை எம்.பி., பதவியை நோக்கி அவரைத் தள்ளியிருக்க வேண்டும்' என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பாமகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறியப்பட்ட அன்புமணி, எம்.பி. பதவியை நோக்கித் தள்ளப்பட்டார். இதுவே அவரின் மாற்றம் ஆகும்.
மறுபுறம், 'முன்னேற்றம்' எதுவும் ஏற்படவில்லை. ஏனெனில், கட்சியின் நீண்டகால கோரிக்கையான வன்னியர் சமுதாயத்தின் உள் இட ஒதுக்கீட்டை பெறவும், வரவிருக்கும் தேர்தலில் தொகுதி பங்கீட்டை உறுதி செய்யவும் ஆளும் அஇஅதிமுக கட்சியின் முன்பாக காத்திருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும் தமிழ்நாட்டில் அதிமுக, திமுக தவிர வேறு எந்தக் கட்சியினரும் முதலமைச்சர் வேட்பாளராக தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள முடியாது என்பது தெரியவருகிறது.
நேற்று முன் தினம் (பிப்.26) சட்டப்பேரவையில் வன்னியர் உள் இடஒதுக்கீட்டுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று (பிப்.27) அதிமுக - பாமக இடையேயான தொகுதி ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அஇஅதிமுக கூட்டணியில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கிறது பாமக. முன்னதாக 2001ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அன்புமணி, "எங்களது பிரதான கோரிக்கையான கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை நிறைவேற்ற அதிமுக அரசு சட்ட மசோதா தாக்கல் செய்துள்ளதால், நாங்கள் போட்டியிடும் இடங்களைக் குறைத்துக் கொண்டோம். இதனால் எங்கள் கட்சி பலம் குறைந்து விட்டது என்று பொருள் அல்ல. நாங்கள் மாநிலத்தில் மூன்றாவது பெரிய கட்சி. அதிமுகவின் வெற்றிக்காக, எங்களது இடங்களை குறைப்பதில் ஆட்சேபனை இல்லை' எனக் கூறினார்.
பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டுமென தொடர்ந்து அரசியல் அரங்கில் பாமக வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், அதிமுக அது தொடர்பாக எந்தவொரு வாக்குறுதியும் வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
கடந்த பத்து ஆண்டுகளில், ஆளும் கட்சியான அதிமுக ஏறத்தாழ 500 மதுபானக் கடைகளை மூடியுள்ளது. இருப்பினும், முழுமையான மது விலக்கை, அமல்படுத்த நீண்ட செயல்திட்டத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியம்.
தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம் (டாஸ்மாக்) மூலமாக மாநில அரசு நாள்தோறும் சுமார் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. தமிழ்நாட்டின் கஜானாவுக்கு பிரதான பங்களிப்பாளராக டாஸ்மாக் (மது விற்பனை) உள்ளது.
பாமகவின் அரசியல் நிலை குறித்து அரசியல் ஆய்வாளர் அ. மார்க்ஸ் கூறுகையில், 'கடந்த 2014, 2019ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களில் அன்புமணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்திக்க நேர்ந்தது.
இந்த தோல்விகளே முதலமைச்சர் இருக்கை மீதான ஆசையை கைவிடுவது நல்லது என அவரை நினைக்க வைத்திருக்கலாம். முதலமைச்சர் இருக்கை மீதான ஆசை ஒட்டிக்கொண்டால், அவரது அரசியல் வாழ்க்கை நிச்சயமாக ஒரு துடிப்பை எடுக்கும்" எனக் கூறினார்.