சென்னை: 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கும், 2026ஆம் ஆண்டு வரவிருக்கிற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கும் சேர்த்து பாமக முழு வேகத்துடன் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளும் முழு மூச்சுடன் நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம், சென்னை திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று (மே 28) நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமை வகித்தார். மேலும், தலைவா் ஜி.கே.மணி கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினா்கள், சிறப்பு விருந்தினா்கள் என அனைவரும் பங்கேற்றனர்.
ஜி.கே.மணி தலைவராக இருந்து வரும் நிலையில், கட்சியின் புதிய தலைவராக தற்போது இளைஞரணி தலைவராக இருக்கும் அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்,அன்புமணி தற்போது பாமகவின் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆரம்பகாலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிவந்த ஜி.கே.மணி, ராமதாஸின் அரசியல் கொள்கையால் கவரப்பட்டு, வன்னியர் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். பாமக தலைவராக, ஜி.கே.மணி கடந்த 25 ஆண்டுகளாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணியை, ராமதாஸ் கட்டி தழுவி வாழ்த்துகள் கூறினார்.
இது தொடர்பான தனது ட்விட்டர் பதிவில் ராமதாஸ், "பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மருத்துவர் அன்புமணி ராமதாஸூக்கு எனது வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நீங்க திராவிட மாடல், நாங்க பாட்டாளி மாடல்- அன்புமணி ராமதாஸ்