சென்னை: சென்னை கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தேசிய கொடியினை ஏற்றி, சிறப்பாக பணியாற்றிய சாரண சாரணியர் களுக்கு விருதுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீட் தேர்வினை நியாயப்படுத்தும் விதத்தில் ஆரம்பத்திலிருந்து ஆளுநர் கருத்துக்களை கூறி வருகிறார். நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருந்து வருகிறது. அதேபோல் அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு ஒரே நேரத்தில் முடியாது.
அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்துவதற்குத் அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதை படிப்படியாக செய்வோம். அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தீவிரமாக இருந்து வருகிறார். மாநகராட்சி மேயராக இருந்த பொழுதே பள்ளி கல்வித்துறை மீது அதிக அக்கறையாக செயல்பட்டவர்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் உடனடியாக அனுப்ப வேண்டும். பேரறிஞர் அண்ணா காலத்தில் எடுத்த தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதிலிருந்து நாம் என்றும் பின்வாங்க மாட்டோம். பிற மொழிகளையும் தமிழ்நாடு மாணவர்கள் கற்க வேண்டும் என்பது அவரின் கருத்து.
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளதால் அதில் கவனம் செலுத்தி வருகிறோம். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முதலமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளோம். முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்பார்.
இதற்கு முன்பு 2 திருப்புதல் தேர்வுகள் நடத்த திட்டமிட்டிருந்தோம். தற்போது பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்கப்படும். எனவே, ஒரு திருப்புதல் தேர்வு மட்டுமே நடத்தப்படும், மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை முழுமையாக முடிக்க வேண்டியுள்ளது.
பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வினாத்தாள் வடிவமைப்பில் எந்தவித மாற்றமும் இருக்காது. இதற்கு முன்பு பொதுத்தேர்வு கேள்வித்தாள் எப்படி இருந்ததோ அப்படியேதான் இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடைபெறும்.
தமிழ்நாடு 3,300 அரசுப்பள்ளிகள் கட்டிடங்கள் பழுது அடைந்து இடிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டடங்களை கட்டுவதற்கு மூன்று நிறுவனங்களிடம் நிதி கோரப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.