சென்னை: சைதாப்பேட்டை தொகுதியில் பொது சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொசு வலை மற்றும் போர்வைகள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'சென்னை மாநகராட்சியில் 3 லட்சம் கொசு வலைகள், நீர் நிலைகளின் ஓரங்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் சைதாப்பேட்டையில் 23ஆயிரம் குடியிருப்புதாரர்களுக்கு கொசு வலைகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டும். மருந்தகங்களில் மருந்துசீட்டு இல்லாமல் சில மருந்துகளை வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கர்ப்பிணி கருக்கலைப்புக்கான மருந்தினை உட்கொண்டதால், உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அதுகுறித்து அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மருத்துவ கவுன்சிலில் வாக்களிப்பு முறைப்படி பதிவாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். 1.5 லட்சம் மருத்துவர்கள் வாக்களிக்கத் தகுதியான மருத்துவர்களாக உள்ளனர். மாவட்ட கவுன்சிலில் உள்ள 10 உறுப்பினர்களில் 3 பேரை அரசு தேர்ந்தெடுக்கும், 7 பேர் தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அதன் பின் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும். மருத்துவ கவுன்சிலுக்கு இன்று நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. அதில் பதிவாளர் பதவி குறித்து விளக்கம் கேட்கப்பட உள்ளது என்றும் நீதிமன்றத்திலும் மருத்துவ சங்கம் சார்பில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது. மேலும் விதிமுறைகளின்படி மருத்துவ கவுன்சில் தேர்தல் நடத்தப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக்கல்லூரி வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் கோரிக்கை. புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு 6 மருத்துவக் கல்லூரி மற்றும் 1 தமிழ் வழி மருத்துவக் கல்லூரி என 7 மருத்துவக்கல்லூரி வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து, புதிய மருத்துவக் கல்லூரி குறித்து நேரில் சென்று கோரிக்கை விடுக்கப்படும்’ என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராணி மேரி கல்லூரியை இடிக்க ஜெயலலிதா முயற்சித்தார் - முதலமைச்சர்