சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீது ஊழல், முறைகேடு புகார்கள் எழுந்தன.
இதன் எதிரொலியாக அவற்றை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
அந்த ஆணையத்திடம், இதுவரை தொலைபேசி மூலம் அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள் உள்பட பலர் புகார் தெரிவித்துள்ள நிலையில், முறையான அலுவலகம், பணியாள்கள் இல்லாததால், விசாரணை தாமதமாகி வந்தது.
தற்போது சூரப்பா மீதான புகார்கள் குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக விசாரணை அலுவலர் கலையரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள பொதிகை இல்லத்தில், அதிகாரப்பூர்வமாக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட விசாரணை அலுவலர் கலையரசன், உயர்கல்வித்துறை வழங்கியிருந்த கோப்புகளின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கி உள்ளார்.
இந்நிலையில், கலையரசன் தலைமையிலான விசாரணை குழுவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள, உயர்கல்வித்துறை துணைச் செயலாளர் சங்கீதா ஐஏஎஸ், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் பொன்னி, சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன், வழக்கறிஞர் சாய் பிரசாத், ஓய்வு பெற்ற நிதித்துறை கூடுதல் செயலாளர் முத்து ஆகிய ஐந்து பேரும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மேலும், விசாரணை அலுவலருக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தனிச் செயலாளர், தட்டச்சர் உள்பட எட்டு பணியாளர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
சூரப்பா மீதான புகார்கள் அடங்கிய கோப்புகளின் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது. உரிய முகாந்திரம் இருந்தால் சூரப்பாவுக்கு சம்மன் அனுப்பப்படும் என கலையரசன் தெரிவித்துள்ளார்.
ஆணைய அலுவலகத்துக்கு நேரிலும், தொலைபேசி மூலமாகவும் யார் வேண்டுமானாலும் உரிய ஆதாரங்களுடன் புகாரளிக்க முன்வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சூரப்பா பதவியேற்ற நாள் முதல் விசாரணை நடத்தப்படும் - விசாரணை அலுவலர் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன்!