சென்னை: ஆம்ரோ கிங்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் சென்னை கோடம்பாக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளராக ராஜராஜன் என்பவரும் அவருடைய மனைவி முத்துலட்சுமியும் இருந்து வந்துள்ளனர். இந்த நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் பத்து சதவீதம் என்ற அடிப்படையில் பத்தாயிரம் ரூபாய் திரும்பத் தருவதாகக் கூறியுள்ளனர்.
பொதுமக்களிடம் வசூலிக்கும் பணத்தை ரியல் எஸ்டேட், சூப்பர் மார்க்கெட், ஹோட்டல்கள், இன்சூரன்ஸ் நிறுவனம், தங்க வியாபாரம் உள்ளிட்ட 18 தொழில்களில் முதலீடு செய்து, அதில் பணத்தை முதலீடு செய்தவர்களையும் பங்குதாரர்களாகச் சேர்த்து ஒரு லட்சம் ரூபாய்க்கு 10 ஆயிரம் ரூபாய் வரை மாதம் திரும்பத் தருவதாக உறுதியளித்துள்ளனர். இதனை நம்பிய ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
பணம் முதலீடு செய்தவர்களுக்கு உறுதியளித்ததை போல சில மாதங்கள், ஒரு லட்சத்திற்கு 10,000 ரூபாய் வரை திரும்ப வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் பிறகு பணத்தைத் திரும்பத் தராமல் நிறுவனத்துடைய உரிமையாளர்கள் நிறுவனத்தை மூடிவிட்டுத் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து முதலீடு செய்தவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள், நிறுவனத்தில் தங்களைச் சேர்த்துவிட்ட முகவர்கள் மீதும் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
குறிப்பாக அசோக் நகரைச் சேர்ந்த சாந்தகுமார் என்பவர் கொடுத்த புகாரில் 71 முதலீட்டாளர்களிடமிருந்து மூன்று கோடியே 26 லட்ச ரூபாய் மதிப்பிற்கு மோசடி செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மார்ச் 16ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக நிறுவனத்தின் அலுவலகத்தில் கடந்த மார்ச் 18 ஆம் தேதி ஐந்து இடங்களில் சோதனை நடத்திப் பல முக்கிய ஆவணங்கள் பணம், தங்கம், வெள்ளி, நகை, கார், எலெக்ட்ரானிக் போருட்கள், ஆவணங்கள் ஆகியவற்றைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக இருக்கும் ராஜராஜன், முத்துலட்சுமி, ரஞ்சித் குமார் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
எம்.எல்.எம் போல் பல்வேறு கூட்டங்களை நடத்தி ஆசை வார்த்தை காட்டி பலரையும் இந்த மோசடியில் சிக்க வைத்தது தெரியவந்தது. இந்த நிறுவனத்தின் முக்கிய தரகரான அய்யனார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த மோசடியில் பல தரகர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்களிடம் வசூல் செய்த பணத்தை வைத்து வாங்கப்பட்ட சொத்துக்கள் குறித்த ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்த மூன்று நிர்வாகிகளையும் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.