ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே தாயை இழந்து காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த மூன்று மாத பெண் யானைக் கன்று வனத்துறையினர் மீட்டனர். அந்த யானையை சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் விலங்குகள் பராமரிப்பு மையத்துக்கு அழைத்துச் சென்று, ’அம்முக்குட்டி’ எனப் பெயரிட்டனர். அங்கு கால்நடை மருத்துவக்குழுவினர் யானையைப் பரிசோதித்து, தினமும் 15 லிட்டர் லேக்டோஜென் (புட்டி) பால் கொடுத்து யானையை பராமரித்துவந்தனர்.
யானையை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குக் கொண்டு சென்று பராமரிக்கப்படவுள்ளதாக வனத் துறையினர் கூறி வந்த நிலையில், திடீரென வனத் துறையினர் அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குக் கொண்டு சென்றுவிட்டனர்.
இத்தருணத்தில் குட்டி யானையை வனப்பகுதிக்குள் விடுவதற்குத் தடை விதிக்கக்கோரி, விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அம்மனுவில், “காட்டில் விடப்பட்டுள்ள குட்டி யானையை தற்போது வரை யானைகள் கூட்டம் சேர்த்துக் கொள்ளவில்லை. மற்ற மிருகங்களால் குட்டி யானை அம்முகுட்டிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், மிருக காட்சி சாலையிலோ, யானைகள் முகாமிலோ வைத்துப் பராமரிக்கக் கோரி வனத்துறைக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காட்டில் விடப்பட்ட குட்டியானையை தினமும் 10 கி.மீ தூரத்திற்கு 5 வனத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர்.
ஆனால் காட்டுக்குள் விடப்பட்ட குட்டியானை அம்முகுட்டியை யானைகள் கூட்டம் சேர்த்துக் கொள்ளாததால் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்திற்கு கொண்டுவரப்பட்டு பின்னர் முதுமலை யானைகள் முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து வனத்துறை அறிக்கையை ஏற்ற நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:ஜெயகோபால், மேகநாதன் ஜாமினை வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதி!