சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் அக்கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (ஏப்ரல் 18) ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கட்சி வளர்ச்சி குறித்தும், அடுத்தக்கட்ட பணிகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், "அமலாக்கத்துறை எனக்கு எந்த சம்மனும் அனுப்பவில்லை. இரட்டை இலை பெரும் வழக்கில் எந்தவிதமான அரசியலும் இல்லை" என்றார்.
தேனீர் விருந்தை புறக்கணித்தது சரி: தொடர்ந்து பேசிய அவர், "நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை திமுக ஏமாற்றியுள்ளது. ஆளுநர் ஜனாதிபதிக்கு நீட் தேர்வு ரத்து தீர்மானத்தை அனுப்பாமல் இருந்ததால் தேனீர் விருந்தை புறக்கணித்தது சரியானதே. அதிமுக தேநீர் விருந்தில் கலந்து கொண்டதைப் பற்றி நான் என்ன கூற முடியும். நான் அரசியல் விமர்சகர் அல்ல. நான் ஒரு சாதாரண அரசியல்வாதி.
திமுகவின் ஓராண்டு ஆட்சி விடியாத ஆட்சி. திமுகவிற்கு உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் வெற்றியை கொடுத்திருக்கின்றனர். ஆனால் திமுக மக்களுக்கு துரோகம் செய்யும். வெளிநாடு பயணம் சென்று வந்தபோது பல்வேறு விமர்சனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது எழுந்தது. தேர்தல் அறிக்கையில் கரோனா காரணமாக சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது உயர்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது.
திமுகவுக்கு நன்றி தெரிவிப்பேன்: 2018ஆம் ஆண்டு சொத்துவரி உயர்ந்த போது மு.க.ஸ்டாலின் இது சொத்து வரியா? அல்லது சொத்தை பறிக்கும் வரியா? என போராட்டம் நடத்தினார். பொருளாதார நெருக்கடியில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் சொத்து வரி உயர்வு தேவையா?. தேர்தலுக்கு முன் நகைகளை அடகு வைக்கச் சொல்லிவிட்டு, தற்போது அதைத் தள்ளுபடி செய்யாமல் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத சாதனைகளைளே திமுக செய்துள்ளது. திமுக வருங்காலங்களில் பின்னடைவை சந்திக்கும். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை வாங்கிக் கொடுத்தால் அரசுக்கு நன்றி தெரிவிப்பேன்.
இளையராஜாவின் தனிப்பட்ட கருத்தை அரசியலாக்க வேண்டாம். அவர் கருத்தை சரி, தவறு எனப் பெரிதுபடுத்த வேண்டாம். இந்த விவகாரத்தில் கருத்து கூறி அவரது மனதை புண்படுத்த விரும்பவில்லை" எனக் கூறினார்.
இதையும் படிங்க: கருப்பு திராவிடன் - யுவன் ஷங்கர் ராஜாவின் அதிரடி பதிவு