தமிழ்நாட்டில், கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியம், மனவளத்தை மேம்படுத்தவும் விளையாட்டுத் திறனை ஊக்குவித்து அதனை வெளிக் கொணரவும் கிராமப்புறப் பகுதிகளில் அம்மா விளையாட்டுத் திட்டம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் கே. பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதன்படி, தற்போது அம்மா விளையாட்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு 76 கோடியே 23 லட்சத்து 9300 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் விளையாட்டு ஆலோசனைக் குழு அமைத்து அம்மா விளையாட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
கபடி, வாலிபால், கிரிக்கெட் உள்ளிட்டவற்றில் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தவும், திறந்தவெளி விளையாட்டு அரங்கம் அமைத்தல், விளையாட்டு, உடற்பயிற்சி உபகரணங்கள் வாங்குவதற்காக இந்த நிதியை செலவழிக்க வேண்டும். ஊராட்சி பகுதிகளில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் ஆடுகளங்கள் அமைக்கலாம் எனவும் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: +1,+2 வகுப்பில் 500 மதிப்பெண் திட்டம் அறிமுகம் - அரசாணை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!