தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ரேஷன் கடைகள் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ரேஷன் கடைகள் நாளை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற ஊரடங்கு மே24ஆம் தேதியான இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை பின்பற்றப்படுகிறது. அதன்படி, தளர்வுகளற்ற ஊரடங்கின் முதல் நாளான இன்று முதல் அனைத்து மளிகைக் கடைகளும் திறக்கப்படாது.
இந்நிலையில் தளர்வுகளற்ற ஊரடங்கு காலத்தில், ரேஷன் கடைகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நடுத்தர, சாமானிய மக்களிடையே பரவலாக எழுந்தது. முன்னதாக 96.4 விழுக்காடு ரேஷன் கார்டுதாரர்களுக்கு முதல் தவணையாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வருகிற ஜுன் 3ஆம் தேதிக்கு முன்பாக கரோனா நிவாரணத்தின் 2ஆம் தவணை ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதனிடையே மே 25ஆம் தேதியான நாளை முதல் 31ஆம் தேதி வரை ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை இயங்கும் என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அப்போது பொதுமக்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ரேஷன் கடைகளுக்குச் செல்ல வேண்டும் என்றும், அநாவசியமாக வெளியில் சுற்றக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’'தி ஃபேலிமேன் 2' தொடரை தடை செய்க’ - மத்திய அரசுக்கு தமிழ்நாடு அமைச்சர் கடிதம்