சென்னை: முருங்கைக்காய் சிப்ஸ், நட்புனா என்ன தெரியுமா, நளனும் நந்தினியும் போன்ற படங்களை தயாரித்தவர், லிப்ரா புரொடக்ஷன் உரிமையாளர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்த பிறகு சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமானார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா வாழ் தொழிலதிபர் விஜய், தயாரிப்பாளர் ரவீந்தர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதில் கிளப் ஹவுஸ் என்ற சமூக வலைதள செயலி மூலமாக தயாரிப்பாளர் ரவீந்தருடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், விஜய் சென்னையில் அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதள செயலியில் பழகியதை வைத்து தயாரிப்பாளர் ரவீந்தருக்கு கடந்த ஆண்டு மே 8ஆம் தேதி, நடிகர் ஒருவருக்கு அட்வான்ஸ் தர வண்டும் எனக் கூறி 20 லட்சம் ரூபாய் பணம் தயாரிப்பாளர் ரவீந்தர் கேட்டதாக தெரிவித்துள்ளார். தன்னிடம் 15 லட்சம் ரூபாய் மட்டுமே இருப்பதாக விஜய் கூறியதாகவும், இரண்டு தவணையாக 10 லட்சம் மற்றும் 5 லட்சம் பணத்தை ரவீந்தர் நிறுவனமான லிப்ரா புரொடக்ஷன் வங்கி கணக்கிற்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.
விஜய்யிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்ட ரவீந்தர், பின்னர் 15 லட்சம் ரூபாய் பணத்தை கடந்த ஆண்டு மே 25ஆம் தேதி திருப்பிக் கொடுத்து விடுவதாக கூறியுள்ளார். ஆனால், ரவீந்தர் சொன்னபடி பணத்தை திருப்பி தரவில்லை என புகாரில் தெரிவித்துள்ளார். ரவீந்தரிடம் பணம் கேட்டதற்கு, தொடர்ந்து அலைக்கழித்ததாகவும், ஒரு கட்டத்தில் செல்போன் நம்பரை பிளாக் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அவதூறு செய்யும் வகையில் பேசியதால் ஆத்திரம் அடைந்த விஜய், ஆன்லைன் மூலம் அமெரிக்காவிலிருந்து ரவீந்திரன் பணம் கேட்டதற்கான ஆதாரம், அவர் பணம் கேட்டு பேசிய ஆடியோ போன்றவற்றை வைத்து சென்னை காவல் ஆணையருக்கு புகாராக அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக தயாரிப்பாளர் ரவீந்தரிடம் கேட்கும்போது, பணம் தர ஒப்புக்கொண்டு விஜய்க்கு செக் அனுப்பியதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் அனுப்பிய செக் இரண்டு முறை பவுன்ஸ் ஆகிவிட்டதாக அமெரிக்கா வாழ் தொழிலதிபர் விஜய் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 15 லட்சத்திற்கான செக் ஒன்றை தன்னிடம் ரவீந்தர் கொடுத்ததாகவும், அதை அவர் சொன்ன தேதியில் போட்டபோது செக் இரண்டு முறை பவுன்ஸ் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தான் பண கஷ்டத்தில் இருப்பதாகவும், இதனால் மன வேதனை ஏற்பட்டு இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். வட்டியுடன் கேட்பதாக ரவீந்தர் பொய்யாக கூறுவதாகவும், தன்னிடம் வாங்கிய 15 லட்சம் ரூபாய் மட்டுமே கேட்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆன்லைனில் வேலை தேடுபவர்களே உஷார்.. எச்சரிக்கின்றனர் சைபர் கிரைம் போலீசார்!