சென்னை: வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை நடைபெறத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் சேர்க்கை குறித்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அரசு வேலை வாய்ப்பு, கல்வியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பும், வரவேற்பும் இருந்தன. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்த சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. இதனால் பொறியியல், கலை அறிவியல் படிப்பு தவிர, மருத்துவம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. மேலும் சட்டப்படிப்பில் 3 ஆண்டு படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வும் நடத்தப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், 3 வருட சட்டப் படிப்பில் (LLB..Hons) சேருவதற்கான கலந்தாய்வு 27ஆம் தேதி நடைபெறும். 3 வருட சட்டப் படிப்பில் LLB (Hons), 2 வருட LLM படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆன்லைனில் இன்றும் (மார்ச் 25), நாளையும் (மார்ச் 26) நடைபெறும் எனவும், 27ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும், இடங்கள் ஒதுக்கீடு முடிந்த பின், மாணவர்கள் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. LLB படிப்புக்கு 27,28ஆம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெற்று, 29ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
மாணவர்கள் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதிக்குள்ளாக கல்லூரிகளில் சேர வேண்டும். 2021-2022ஆம் கல்வியாண்டுக்கான LLB, LLM சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியான நிலையில், இன்று சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது.