சென்னை: அம்பத்தூர் பழைய சிடிஎச் சாலையில் இந்தியன் வங்கி கிளையும், அதன் அருகிலே ஏடிஎம் மையமும் உள்ளது. இந்த நிலையில் இன்று (பிப்.2) காலை அம்பத்தூரைச் சேர்ந்த பாலசுப்ரமணி என்பவர், தொடர்ந்து 3 முறை 20,000, 15,000 மற்றும் 10,000 பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார்.
ஆனால் பணம் வரவில்லை. இருப்பினும் 8,000 ரூபாய் பணம் எடுக்க முயற்சி செய்தபோது, 12,000 ரூபாய் கூடுதலாக சேர்த்து மொத்தம் 20,000 ரூபாய் வந்துள்ளது. அதேபோல் திருமுல்லைவாயிலைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரும் 20,000 ரூபாய் பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் பணம் எடுக்க முடியாமல், 8,000 ரூபாய் எடுக்க வேண்டும் என்ற கட்டளை வந்துள்ளது.
அதன்படி 8,000 ரூபாய் எடுக்க முயற்சி செய்தபோது, அவருக்கும் 20,000 ரூபாய் பணம் வந்துள்ளது. இதேபோன்று 10க்கும் மேற்பட்ட இதர வங்கிகளின் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் கூடுதல் பணம் வந்துள்ளது. மேலும் இதுகுறித்து இந்தியன் வங்கி கிளை தரப்பில் கூறுகையில், “தவறுதலாக பணம் வந்த சம்பவத்தில், இதுவரை 6 பேர் பணத்தை வங்கிக்கு நேரில் வந்து திருப்பி கொடுத்துள்ளனர்.
ஏடிஎம் இயந்திரத்தில் 200 ரூபாய் வைக்க வேண்டிய டிரேவில் 500 ரூபாய் நோட்டுகளை, பணம் வைக்கும் நபர்கள் தவறுதலாக வைத்ததால் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஏடிஎம்மில் ஏற்பட்ட கோளாறை, ஏடிஎம் பராமரிப்பு குழுவினர் சரி செய்தனர்” என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கோவை கோர விபத்து: நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ!