சென்னை: ஆவடி அடுத்த கொரட்டூர் பகுதியில் அமைந்துள்ள பிரபல குடியிருப்பில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 80-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை சிலர் வளர்த்து வருகின்றனர். நாய்கள் குழந்தைகளை கடிப்பதாக பொதுமக்கள் அவ்வப்போது சென்னை மாநகராட்சியின் நாய் பிடிக்கும் அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டவில்லை என குடியிருப்புவாசிகள் வேதனைத் தெரிவித்தனர்.
மேலும், மாநகராட்சி ஊழியர்கள் நாயைப் பிடிக்க வரும்போது அங்குள்ள சிலர் நாயைப் பிடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், அவ்வப்போது தெருக்களில் உள்ள நாய்களை அந்த குடியிருப்புக்குள் அழைத்து வந்து உணவளிப்பதாகவும் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
இந்நிலையில், குடியிருப்புவாசிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கொரட்டூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் காவலர்கள் அனைவரும் அம்பத்தூர் ஒ.டியில் உள்ள தனியார் மண்டபத்தில் குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் இருந்தது குறித்து அறிந்த அவர்கள், உடனடியாக அந்த மண்டபத்திற்குச் சென்று அங்கிருந்த காவல் துணை ஆணையர் மணிவண்ணனிடம் தங்களது குறைகளை தெரிவித்தனர்.
குறைகளை கேட்ட மணிவண்ணன் விரைவில் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து தெருநாய்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக உத்தரவாதம் அளித்ததையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த மண்டபமே சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.