சென்னை: தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்ற கழகம் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது கவர்ச்சிகரமான பல்வேறு வாக்குறுதிகளை முன்னிறுத்தி வெற்றி பெற்றது. அதில் மாதம் தோறும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
பின்னர் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகியும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தாமல் இருந்ததால் எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்கள் வைத்து வந்தன. இதனைத் தொடர்ந்து 2023 ஆண்டிற்கான பட்ஜெட்டை நேற்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சமர்ப்பித்தார். அந்த பட்ஜெட்டில் பல்வேறு அம்ச திட்டங்களை நிதி அமைச்சர் அறிவித்தார். அதில் குடும்பத் தலைவிகளுக்கு, மகளிர் உரிமைத்தொகை மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.
மேலும், தமிழகத்தில் தகுதியுள்ள மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்படும் எனவும், வரும் செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாள் அன்று முதலமைச்சர் ஸ்டாலின் இத்திட்டத்தினை துவங்கி வைப்பார் எனவும் அறிவித்திருந்தனர். எப்போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்க வைத்திருந்த திட்டம், தற்போது அரிவிக்கப்பட்ட பின் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
தேர்தல் வாக்குறுதியின் போது அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு தற்போது தகுதி உள்ள மகளிர் மட்டும் வழங்கப்படும் என அறிவித்து திமுக ஏமாற்று வேலை செய்கிறது என எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அதே வேளையில் சிலிண்டர் கேஸ் விலை உயர்வால் அவதிப்படும் அடித்தட்டு மகளிர், இந்த ஆயிரம் ரூபாய் மூலம் பயனடைவார்கள் என இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பு மகளிர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
இது குறித்து சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் துர்கா தேவி கூறுகையில், “பட்ஜெட் கூட்டத்தொடரில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அண்ணா பிறந்தநாள் அன்று தொடங்கப்படும் என அறிவித்தது வரவேற்கக் கூடிய ஒன்று. சுயமரியாதை கொண்ட தற்சார்பு பெண் சமூகத்தை உருவாக்குவதற்கு திமுக தலைமையிலான தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.
பெண்களின் உரிமைகளை காக்கும் தமிழக அரசு இன்னும் பல நூற்றாண்டுகள் ஆட்சி புரிந்து தமிழ்நாட்டை உலக அளவில் தலைசிறந்த மாநிலமாக உருவாக்கும். இந்த திட்டத்தை நான் ஒரு பெண்ணாக வரவேற்கிறேன். இத்திட்டத்தின் மூலம் அடித்தட்டு மக்கள் மிகவும் பயன்பெறுவார்கள். இத்திட்டத்தின் மூலம் பெண்கள் வளர்ச்சிக்கு தமிழக முதல்வர் ஊன்றுகோலாக இருப்பது எடுத்துக்காட்டாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும் பட்ஜெட்டில் திட்டத்தை அறிவித்தபோது தகுதி உள்ள மகளிர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்ததற்கு பல்வேறு தரப்பினர் தேர்தல் வாக்குறுதியின் போது கூறியது போல் அனைத்து மகளிர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த சைலஜா மற்றும் மல்லிகா கூறுகையில், “தேர்தல் வாக்குறுதியின் போது அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது பட்ஜெட் கூட்டத்தொடரில் தகுதியுள்ள மகளிர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
தேர்தல் வாக்குறுதியின் போது என்ன சொன்னார்களோ அதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும். அனைத்து மகளிர்களும் தான் வாக்களித்தனர். அதனால் தகுதியுள்ளவர்கள் இல்லாதவர்கள் என பிரிக்க வேண்டாம். எனவே அனைத்து மகளிர்களுக்கும் மாதம்தோறும் மகளிர் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என அனைத்து மகளிர் சார்பாகவும் வேண்டுகோள் வைக்கின்றோம்” என்றனர்.