சென்னை கோயம்பேடு மாநில தேர்தல் அலுவலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி, விழுப்புரம், ராணிப்பேட்டை கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய ஒன்பது மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அறிவித்த தேதிகளில் (டிச. 27, 30ஆம் தேதி) இரண்டுகட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். மறைமுக தேர்தல் ஜனவரி 11ஆம் தேதி நடைபெறும்.
- வாக்குப் பதிவு: டிசம்பர் 27 & 30ஆம் தேதி
- வேட்புமனு தாக்கல்: டிசம்பர் 9ஆம் தேதி முதல் 16.12.19 ம் தேதி வரை.
- வேட்புமனு பரிசீலனை: டிசம்பர் 17ஆம் தேதி
- வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள்: டிசம்பர்19ஆம் தேதி
- வாக்கு எண்ணிக்கை: ஜனவரி 2ஆம் தேதி
- தேர்தல் விதிகள் ஜனவரி 4ஆம் தேதி வரை அமலில் இருக்கும்
- தேர்தலில் வெற்றி பெற்றோர் பதவியேற்பு ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும்.
மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் / துணைத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்தெடுப்பதற்கான மறைமுக தேர்தலுக்கான கூட்ட நாள் 11.01.2020 ஆகும்.
ஊரக ஊராட்சிகளில் மொத்தம் 91,975 பதவியிடங்கள் நிரப்பிட நேரடி தேர்தல் நடைபெறும். கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் நடைபெறும்.
இத்தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு 24,680 வாக்குச்சாவடிகளிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 25,008 வாக்குச்சாவடிகளிலும் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் முதல் கட்டமாக ஒரு கோடியே முப்பது லட்சம் வாக்காளர்களும், இரண்டாம் கட்டமாக ஒரு கோடியே இருபத்தி எட்டு லட்சம் வாக்காளர்களும் வாக்களிக்கவுள்ளனர்.
மக்கள் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு பொருள்களைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடப்பதை உறுதி செய்யவும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பதவியிடங்களைத் தவிர்த்து ஏனைய பதவியிடங்களுக்கு வாக்குப்பதிவிற்கு சுமார் 1,83,959 வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன.
குமரி மாவட்டம் மெல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊரக வளர்ச்சி அமைப்புகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நான்கு பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் முன்னோடி திட்டமாகக் கொண்டு 114 வாக்குச்சாவடிகளில் செயல்படுத்தப்படவுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் ஒருவர் வீதம் தேர்தல் பணிகளை பார்வையிட தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படவுள்ளனர். பதிவு செய்யப்படாத, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் மேற்குறிப்பிட்ட ஒன்பது மாவட்டங்கள் தவிர்த்து, ஏனைய 27 மாவட்டங்களிலுள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நடத்தை விதிகள் தொடரும். அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடித்து தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற எல்லா விதத்திலும் தேர்தல் ஆணையத்தோடு ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்றார்.
இதையும் படிங்க: மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை - ஸ்டாலின் அறிக்கை