கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்துக்குள் அணுக்கழிவுகள் சேமிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அமமுக நிர்வாகி வெற்றிவேல், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், விசிக தலைவரும் சிதம்பரம் எம்.பி.யுமான தொல். திருமாவளவன் பேசுகையில், “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை தற்காலிகமாக ஒரு இடத்தில் சேமித்து வைக்கும் நடவடிக்கைகளை அணுசக்தி கழகம் மேற்கொள்ள இருக்கிறது.
கூடங்குளத்தில் இரண்டு அலகுகள் மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளது. இதில் ஆண்டுக்கு 30 ஆயிரம் டன் அணுக்கழிவு உற்பத்தி ஆகும். இந்தக் கழிவுகள் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாதவாறு கையாள வேண்டும். அணு உலைக்கு மிக தொலைவில் 1.5 கிமீ ஆழத்தில் ஒரு லட்சம் ஆண்டுகள் பாதுகாப்பாக வைக்கும் கருவூலத்தை அமைத்து அணுக்கழிவுகளை பாதுகாப்பாக சேமிக்க வேண்டும். ஆனால் இதுவரை ஆழ்நில கருவூலம் அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், அணு கழிவுகளை அணு உலை வளாகத்தில் சேமிக்க அணுசக்தி நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது. இதுகுறித்து மக்களிடம் கருத்துக் கேட்க ஜூலை 10ஆம் தேதி கூட்டம் நடைபெறவுள்ளது. அணுக்கழிவுகளை அணு உலை வளாகத்துக்குள் சேமித்தால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும். எனவே இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி ஜூன் 25ஆம் தேதி நெல்லையில் அனைத்து கட்சியினரும், சுற்றுச்சூழல் பாதுகாவலர்களும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இந்த போராட்டத்துக்கு பின்பும் அணுக்கழிவுகள் அமைக்கும் பணி கைவிடப்படவில்லை என்றால் ஜூலை 10ஆம் தேதி நடக்கும் மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு எங்கள் எதிர்ப்புகளை தெரிவிப்போம்” என்றார்.