தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில், கணினி அறிவியல் பிரிவுக்கான முதுநிலை ஆசிரியர் நியமனம் செய்வதற்கான இணையதள எழுத்துத்தேர்வு இன்று நடைபெற்றுவருகிறது. பள்ளிக் கல்வித் துறையில் பணி புரிவதற்காக 814 கணினி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெளியிடப்பட்டது.
முதன் முறையாக ஆசிரியர் தேர்வு வாரியம் கணினி மூலம் இணையதள எழுத்துத்தேர்வு நடைபெறும் என தெரிவித்திருந்தது.
இத்தேர்வினை எழுதுவதற்கு ஏழாயிரத்து 546 ஆண்களும், 23 ஆயிரத்து 287 பெண்களும் இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு 119 மையங்களில் இன்று நடைபெற்றுவருகிறது.
தேர்வினை எழுத வந்தவர்கள் வருகை பதிவினை பயோமெட்ரிக் முறையில் சரி பார்த்து அனுமதிக்கப்பட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வானது மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளது.
150 மதிப்பெண்களுக்கு நடைபெற்றுவரும் இந்தத் தேர்வினை தேர்வர்கள் ஆர்வமுடன் எழுதி வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்றுவரும் தேர்வை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் ஆய்வு செய்துவருகிறார்.