சென்னை: காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (மார்ச்.1) தமிழ்நாடு வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, 'அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக மல்லிகார்ஜுன கார்கே சென்னை வருகிறார். நண்பகல் 12 மணிக்கு தமிழ்நாடு வருகை தரும் அவர் தங்கும் விடுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளளார். அதன் பின்பு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கூட்டத்தில் கலந்துகொள்வதோடு, இரவு சென்னையில் தங்க உள்ளார்.
இரண்டாவது நாள் காலை ஶ்ரீ பெரும்பத்தூரில் உள்ள ராஜீவ் காந்தி காந்தி நினைவிடம் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவதோடு, அங்கு இந்திரா காந்தி சிலையையும் திறந்து வைக்க உள்ளார். அதன்பின்னர் கட்சி தொடர்பாக முக்கிய தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
சமூக நீதி என்னவென்று சொன்னால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என்பது தான் சமூக நீதி. நாடு சுதந்திரம் அடைந்து காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தபோது காங்கிரஸ் காரர்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவியை மகாத்மா காந்தி வழங்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைமை எதிரியாக இருந்து தொடர்ந்து எதிர்த்து வந்த அண்ணல் அம்பேத்கருக்கும் அமைச்சர் பதவி வழங்கினர்.
அரசாங்கம் என்பது ஒரு கட்சியினுடைய அரசாங்கம் அல்ல. இது நாட்டு மக்களினுடைய அரசாங்கம் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். அதுதான் சிறந்த ஜனநாயகம் முறை என்பதை காந்தியின் ஆலோசனையுடன் ஜவஹர்லால் நேரு நடைமுறைப்படுத்தினார். அதனை பிரதிபலிக்கும் விதமாக இன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் பதவிகளில் 50 சதவீதத்தை இளைஞர்களுக்கும், பழங்குடியினருக்கும், பட்டியலினத்தவர்களுக்கும், காங்கிரஸ் கட்சி வழங்கியுள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலின் 70ஆவது பிறந்தநாள்.. சென்னையில் கூடும் தலைவர்கள்..