சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட இணையாளர்கள் 1 & 2 கட்டுப்பாட்டில் வரக்கூடிய சுமார் 1216 திருக்கோயில்களில் முதுநிலை கோயில்களில் பணியாற்றும் அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.
அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "இந்த ஆய்வு கூட்டத்தில் ரூ.160 கோடி அளவில் சென்னை மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு உட்பட்ட கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டிய திருக்கோயில்கள், திருக்கோயில்களில் திருமண மண்டப வசதி, அர்ச்சகர்களுக்கான குடியிருப்பு, பசு மடங்கள் புனரமைப்பு உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
சென்னையைத் தொடர்ந்து வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய 38 மாவட்டங்களிலும் 20 இணையானர்கள் தலைமையில் ஒவ்வொரு மாவட்டமாக அழைத்து அங்குள்ள திருக்கோயில்களில் உள்ள பணிகள், அதில் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வரக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இது போன்ற கூட்டம் சென்னையில் மட்டுமின்றி அனைத்து மண்டலங்களிலும் நடைபெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற இந்த 14 மாதங்களில் வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம். இன்று கூட 120 கோடி செலவில் பக்த கோடிகளுக்கான அடிப்படை வசதிகள் உட்பட்ட 54 பணிகளுக்கு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் அறநிலையத்துறையை விட தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மழைக்காலங்களில் கோயில் குளங்களில் மழைநீரை கொண்டு வருவது, உபரி நீரை வெளியேற்றுவது உள்ளிட்ட பணிகள் ரூ.40 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அதனை கண்காணிக்க ஒய்வு பெற்ற பொதுப்பணி, மாநகராட்சி துறை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளது. அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் உட்பட 9 பயிற்சி பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் 186 பேருக்கு பயிற்சி பள்ளிகளில் சேர்வதற்கான உத்தரவினை முதலமைச்சர் வழங்கி இருக்கிறார்.
பயிற்சி பள்ளியில் மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ரூ.1000 உதவித்தொகை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அனைத்து சாதியினரும் அனைத்து திருக்கோயில்களிலும் அர்ச்சகர் ஆவதற்கான அடிப்படை பணிகளாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மழைநீர் தேங்கியது குறித்து அறநிலையத்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு இறுதி வடிவம் பெற்ற பின் முதலமைச்சரிடம் அளித்து ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்படும்.
தமிழ்நாட்டில் கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்க கூடிய பணி நல்ல நிலையில் சென்று கொண்டிருக்கிறது. திருத்தணி கோயிலில் இரண்டு படித்துறைகளிலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஓடாமல் இருந்த தங்கத்தேரை ஓட வைத்துள்ளோம். திருக்கோயில் பணியாற்றும் பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்கப்பட உள்ளது. திருத்தணியில் இறந்து போன யானைக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகள் தொடங்க இருக்கின்றன. பக்தர்கள் தங்கும் விடுதியை புனரமைக்கவும், புதிய விடுதிகள் கட்டவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும் வகையில் மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. கோயிலில் மாற்று பாதை ஏற்படுத்துவதற்காக வனத்துறையிடம் பேசிக் கொண்டிருக்கின்றோம். கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு இந்த ஆடி கிருத்திகைக்கு வாகனத்திற்கு குறைந்த அளவு அனுமதி வழங்கி, பக்தர்களுக்கு அதிக அளவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்பு இல்லாத அளவிற்கு திருத்தணி கோயிலில் காணிக்கை அதிகரித்துள்ளது. முருகன் மகிழ்ச்சியாக இருக்கிறார். முருகனை தரிசிக்க வந்த பக்தர்களும் மகிழ்ச்சியோடு வந்து செல்கின்றனர். பக்தர்களின் தேவைக்கு அதிகமான அளவிற்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலில் தரிசனத்திற்கு பணம் வாங்கும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என கூறினார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களுக்கான ஜாமீன் நிபந்தனைகள் என்னென்ன?