திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக்கொண்ட சிறுவன் சுஜித் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் சோக அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் அமைக்கப்பட்டு பயன்பாடற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை 24 மணி நேரத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்றவேண்டுமென குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு செயல்படாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்ட உத்தரவில், “மழைநீர் சேகரிப்பு குறித்து விளக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இணையதளம், ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களை உருவாக்கி உள்ளது. எனவே இது தொடர்பான சந்தேகங்கள், கேள்விகள் ஆகியவற்றை மேற்காணும் சமூக ஊடகங்கள் வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ மாவட்டங்களில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் மழைநீர் சேகரிப்பு தொடர்பாக விழிப்புணர்வு குறும்படம் அனைத்து திரையரங்குகளிலும் ஒளிபரப்பப்படுகிறது. நிலத்தடி நீடித்த குடிநீர் பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் மழைநீர் சேகரிப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வழங்கியுள்ளது.
இதனைப் பயன்படுத்தி குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மழைநீர் சேகரிப்பை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆகியோர் இயங்காத, பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணற்றில் மழைநீர் சேமிப்பு கட்ட தேவையான தொழில்நுட்ப உதவியை குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
மழைநீர் சேகரிப்பு குறித்த விரிவான விவரங்கள் வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர தகவல் பெறும் மையத்தின் தொடர்பு எண்ணைப் பயன்படுத்தி பயன்பெறலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.