தூத்துக்குடி: முள்ளக்காடு பகுதியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி செயல்பட்டு வரும் தூத்துக்குடி அல்காலி ரசாயன மற்றும் உர நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி திருநெல்வேலியை சேர்ந்த முத்துராமன் என்பவர் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் தனது மனுவில், அல்காலி நிறுவனத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய அனுமதி, 2015-ம் ஆண்டுடன் முடிந்து விட்டதாகவும், அதன் பின் இதுநாள் வரை அனுமதியை புதுப்பிக்காமல் ஆலை இயங்கி வருவதாகவும், ஆலை ஏற்படுத்திய மாசுவுக்கு இழப்பீடு செலுத்த உத்தரவிட வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
ஆலையை இயக்க அனுமதி
இந்த வழக்கை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆலையை இயக்க அனுமதி நீட்டிக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் கரோனா கட்டுப்பாடுகளால் ஆலை மூடப்பட்டதாகவும், ஆலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நேரில் ஆய்வு செய்து அறிக்கை
ஆலையை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டது. அக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், 453 நாள்கள் கெமிக்கல் ஆலை அனுமதியின்றி செயல்பட்டுள்ளதாக கூறி, 36 லட்சத்து 24 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஆறு மாத தவணைகளாக செலுத்த தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
ஆலைக்கு எதிராக நடவடிக்கை
இத்தொகையை செலுத்தாவிட்டால், அதை வசூலிக்க நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட தீர்ப்பாயம், ஆலையை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும், விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் ஆலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டது.
இதையும் படிங்க: முதலமைச்சருக்கு பரிசளித்த காவலர்கள்; ஒரு நாள் விடுமுறைக்கு நன்றி