ஆர்ஆர்ஆர் படம் தொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவை அலியா பட் நீக்கியது குறித்து பல்வேறு சர்ச்சை எழுந்தநிலையில், தற்போது அவர் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அலியா பட் உள்ளிட்டோர் நடித்து வெளியான பிரமாண்டமான திரைப்படம் ஆர்ஆர்ஆர். உலகம் முழுவதும் இப்படம் ஐநூறு கோடிக்கும் மேல் வசூல் குவித்து வருகிறது. இந்நிலையில் இதில் நடித்த அலியா பட்டின் காட்சிகள் குறைக்கப்பட்டதால் இப்படம் தொடர்பான பதிவுகளை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாக சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து அலியா பட் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் ’ஆர்ஆர்ஆர் படக்குழுவோடு ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக இன்ஸ்டாகிராமில் இருந்த தன்னுடைய ஆர்ஆர்ஆர் குறித்த பதிவுகளை நீக்கியதாக பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை.
இன்ஸ்டாகிராமில் நடந்ததை வைத்து மேம்போக்காக பார்த்துவிட்டு கட்டுக்கதைகளை எழுதவேண்டாம்’ என்று கூறியுள்ளார். இன்ஸ்டாவில் எப்போதும் பழைய வீடியோக்களை ஒழுங்குபடுத்துவதை வழக்கமாக கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், ஆர்ஆர்ஆர் படத்தில் தான் நடித்ததை நிச்சயமாக ஒரு பாக்கியமாக கருதுகிறேன். ராஜமௌலி இயக்கத்தில் நடித்ததை மிகவும் விரும்புகிறேன். ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரணுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியான தருணம். ஆர்ஆர்ஆர் படத்தின்போது கிடைத்த அனுபவத்தை நேசிக்கிறேன்.
வருத்தத்தோடு இந்த விஷயத்தை தெளிவுபடுத்தக் காரணம், ராஜமௌலி மற்றும் படக்குழுவினர் பல ஆண்டுகளாக இந்த அழகான படத்தை உருவாக்க மெனக்கெட்டு இருக்கிறார்கள். உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள் என்பதுதான். அதனால் தவறாக பரப்பப்படும் தகவல்களை மறுப்பதாகவும் அலியா பட் விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: 'மன்மத லீலை' படத்திற்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு