சென்னை: பொங்கலுக்கு 'துணிவு' மற்றும் 'வாரிசு' ஆகிய திரைப்படங்கள் வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகிய நிலையில், இந்த திரைப்படங்களில் உள்ள விஜய் மற்றும் அஜித் கெட்டப்களின் புகைப்படங்களை தங்களின் ஆட்டோக்களில் போக்குவரத்து விதிமுறையை மீறி ஒட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொது இடங்களில் ’துணிவு’ படத்தில் அஜித் புகைப்படத்துடன் வலம் வரும் ஆட்டோவை படம் பிடித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து, சென்னை போக்குவரத்து காவல்துறையிடம் நபர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதற்கு பதிலாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ’வாரிசு’ திரைப்பட போஸ்டர் ஒட்டப்பட்ட ஆட்டோக்களின் புகைப்படங்களை, மற்றொரு நபர் வெளியிட்டு ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
இவர்கள் அளிக்கும் அனைத்து புகார்களையும், கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அதே சமூக வலைதளத்தில் சென்னை போக்குவரத்து காவல்துறை பதில் அளித்துள்ளது. பல்வேறு காலகட்டங்களிலும், பல்வேறு விதங்களிலும் மோதிக்கொண்ட ரசிகர்கள், தற்போது புது விதமாக போக்குவரத்து காவல்துறையிடம் முறையிட்டு மோதிக்கொள்வது நிகழ்ந்து வருகிறது.
அண்மையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி நடிகர் விஜய் தனது காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதாக சமூக வலைதளங்களில் பகிர்ந்த புகாரால், நடிகர் விஜய் கார் மீது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "நலமுடன் இருக்கிறேன்" - வதந்திக்கு நடிகை லட்சுமி விளக்கம்!