சென்னை: டெல்லி - சென்னை ஏர் இந்தியா பயணிகள் விமானம் 3 மணி நேரம் தாமதமாக வந்ததன் காரணமாக, சென்னையில் இருந்து இலங்கை மற்றும் அந்தமான் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானங்களும் 3 மணி நேரத்திற்கு மேலாக தாமதமாகி, சென்னை விமான நிலையத்தில் பயணிகள் இது குறித்து அறிந்திராது கடும் அவதிக்கு உள்ளாகினர்.
டெல்லியில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு (ஆகஸ்ட் 3) 11:30 மணிக்கு வர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் 3 மணி நேரம் தாமதமாக இன்று (ஆகஸ்ட் 4) அதிகாலை 2:30 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது. இந்த விமானம் வழக்கமாக டெல்லியில் இருந்து வந்த பின்பு சென்னையில் இருந்து நள்ளிரவு 12:25 மணிக்கு இலங்கையின் கொழும்பு நகருக்கு சர்வதேச விமானமாக புறப்பட்டு செல்லும். அவ்வாறு செல்லும் விமானம் அதிகாலை 4:25 மணிக்கு சென்னைக்கு திரும்பி வரும்.
அதன் பின்பு அதே விமானம் மீண்டும் உள்நாட்டு விமானமாக, அதிகாலை 5:05 மணிக்கு சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட்டு செல்லும். ஆனால் இன்று ஏர் இந்தியா பயணிகள் விமானம் டெல்லியில் இருந்து 3 நேரம் தாமதமாக அதிகாலை 2:30 மணிக்கு வந்ததால், இலங்கை செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் 4 மணி நேரம் தாமதமாக இன்று அதிகாலை 4:20 மணிக்கு சென்னையில் இருந்து இலங்கை புறப்பட்டு சென்றது.
இதையும் படிங்க: கேதார்நாத் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் மாயம் - மோசமான வானிலையால் மீட்புப் பணிகள் பாதிப்பு!
பின் இன்று காலை 7:30 மணிக்கு சென்னைக்கு தாமதமாக திரும்பி வந்தது. அதன்பின்பு காலை 5:05 மணிக்கு சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம் மூன்றரை மணி நேரம் தாமதமாக இன்று காலை 8:45 மணிக்கு சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட்டு சென்றது.
இதேப்போல் சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானங்கள் அடுத்தடுத்து தாமதம் ஆகியதால் சென்னை விமான நிலைய பயணிகள் மற்றும் டெல்லி, இலங்கை, அந்தமான் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய பயணிகள் என அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இவ்வாறு விமானம் தாமதமானது ஒரு புறம் இருக்க, தாமதம் பற்றிய எந்த விதமான முன்னறிவிப்பும் பயணிகளுக்கு வழங்கப்படாததால் சென்னை விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருந்த பயணிகள் பெரும் தவிப்புக்கு ஆளாகினர்.
இதையும் படிங்க: Sellur Raju: கட்சியை விட்டு சென்றவர்களை மிதித்துவிட்டு செல்வோம்: சீண்டும் செல்லூர் ராஜூ