சென்னை: சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் திடீர் இயந்திரக் கோளாறால் ரத்து செய்யப்பட்டதால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், இன்று (ஆகஸ்ட் 19ஆம் தேதி) காலை 10:05 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலைய முனையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 147 பயணிகள் பயணிக்க இருந்தனர். இந்தப் பயணிகள் அனைவரும் காலை 8:30 மணிக்கு முன்னதாகவே சென்னை விமான நிலையத்திற்கு வந்து பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனர்.
இந்நிலையில், டெல்லியில் இருந்து வழக்கமாக காலை 9 மணிக்கு சென்னைக்கு வரும் ஏர் இந்தியா விமானம், மீண்டும் காலை 10:05 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு செல்லும். அதன்படி டெல்லியில் இருந்து வரும் விமானம் காலை 9 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது. ஆனால் அந்த விமானத்தை இயக்கி வந்த விமானி, விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பதாகவும், அதை சரி செய்த பின்பு மீண்டும் விமானத்தை இயக்கும்படியும் குறிப்பு எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: நீட் விலக்கில் மத்திய அரசு அசைந்து கொடுப்பது போல் தெரியவில்லை - பா.சிதம்பரம்
அதனைதொடர்ந்து, விமானத்தில் ஏற வந்த பயணிகளை விமானம் தாமதமாக புறப்படும் என்று கூறி விமானத்தில் ஏற்றாமல் ஓய்வறைகளில் தங்க வைத்தனர். மேலும், விமான பொறியாளர்கள், விமானத்துக்குள் ஏறி இயந்திரங்களை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பகல் 2 மணி வரையிலும் விமானத்தின் இயந்திரங்கள் சரி செய்யப்படவில்லை. இதனால் விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்த பயணிகள் அனைவரும் சென்னை விமான நிலையத்தில் நான்கு மணி நேரத்திற்கு மேலாக தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் 147 பயணிகளையும் மாற்று விமானங்களின் மூலமாக டெல்லிக்கு அனுப்பி வைக்க சென்னை விமான நிலைய அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கின்றனர்.
மேலும், சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக பயணிகள் விமான நிலையத்தில் நான்கு மணி நேரத்துக்கு மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாதுகாப்பு கேள்விக்குறி!