சென்னை: சென்னையில் இருந்து நேற்று (ஜன.4) இரவு 7 மணிக்கு குவைத் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் 138 பயணிகள், 8 விமான ஊழியர்கள் உள்பட 146 பேர் பயணிக்க இருந்தனர். பயணிகள் அனைவரும் மாலை 4 மணிக்கு முன்னதாகவே சென்னை விமான நிலையம் சென்று, அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏறுவதற்குத் தயாராக இருந்தனர்.
அப்போது வழக்கம்போல பயணிகளை விமானத்தில் ஏற்றுவதற்கு முன்னதாக, விமானத்தின் இயந்திரங்களை விமானிகள் சரிபார்த்துள்ளனர். அப்போது விமானத்தில் இயந்திரக் கோளாறுகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து விமானத்தில் பயணிகளை ஏற்றாமல், விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவித்துள்ளனர். அதோடு விமானப் பொறியாளர்கள், விமானத்துக்குள் ஏறி, பழுதடைந்த இயந்திரங்களை சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் நள்ளிரவு 12 மணி வரையில் விமானத்தில் இயந்திரங்களை சரி செய்ய முடியவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து பல மணி நேரம் காத்திருந்த பயணிகள் ஆத்திரமடைந்து, ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்தின் இயந்திரங்கள் சரி பார்க்கும் பணி சிறிது நேரத்தில் முடிந்துவிடும் என்று கூறி பயணிகளை அமைதிப்படுத்தி உள்ளனர்.
ஆனால் இன்று (ஜன.5) அதிகாலை 1 மணி வரை விமானத்தின் இயந்திரங்கள் பழுது பார்க்கும் பணி முடிவடையாததால், விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் 138 பேரும், சென்னை விமான நிலையத்தில் இருந்து சொகுசு பேருந்துகளில் ஏற்றப்பட்டு, சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விமானம் இன்று (ஜன.5) வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், குவைத் செல்லவிருந்த 138 பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக குவைத் செல்ல முடியாமல், சென்னையில் பயணிகள் தவித்து வருகின்றனர். அதேபோல் அந்த விமானம் குவைத் சென்று விட்டு, மறுமார்க்கமாக மீண்டும் இன்று (ஜன.5) காலை 6.30 மணிக்கு, சென்னைக்கு திரும்பி வரும்.
குவைத்தில் இருந்து சென்னைக்குத் திரும்பி வரவேண்டிய ஏர் இந்தியா விமானமும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதால், மறுமார்க்க விமானம் மூலமாக குவைத்தில் இருந்து சென்னை வர இருந்த சுமார் 150 பயணிகள் குவைத் விமான நிலையத்தில் தவித்து வருக்கின்றனர்.
பயணிகள் தவிப்பு ஒரு புறம் இருந்தாலும், விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறுகளை விமானிகள் சரியான நேரத்தில் கண்டுபிடித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு 146 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
இதையும் படிங்க: நாளை சென்னை மாரத்தான்.. போக்குவரத்தில் முக்கிய மாற்றம்!