சென்னை: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து ஐஐடியில் பட்டியலின மாணவி பாலியல் செய்யப்பட்ட வழக்கை விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து ஐஐடி அருகே முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுகந்தி, "ஐஐடி மாணவி பாலியல் வழக்கை சிபிசிஐடி மிகவும் மெத்தன போக்குடன் கையாண்டு வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு மயிலாப்பூர் காவல் நிலையத்தில் இந்த வழக்கு குறித்து கேட்டபோது, வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இனி அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினர்.
இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி அதிகாரிகளிடம் கேட்டபோது இன்னும் காவல் நிலையத்தில் அதற்கான ஆவணங்கள் வரவில்லை என கூறுகின்றனர். இப்படி மாறி மாறி பேசுகின்றனர். தமிழ்நாடு அரசு, சிபிசிஐடி, ஐஐடி நிர்வாகம் ஒன்று சேர்ந்துகொண்டு, பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இதில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று குற்றவாளிகள் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டனர். ஐஐடி நிர்வாகம் ஒரு குழுவை அமைத்து மாணவியை பாலியல் வன்முறை செய்யவில்லை என அறிக்கையைத் தயார் செய்திருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக தயார் செய்யப்பட்ட மூன்று திட்ட அறிக்கையை வெளியிட விடாமல் தடுக்கின்றனர்.
மாணவியை ஐஐடி வளாகத்தில் இருந்து வெளியே அனுப்புவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். தற்கொலைக்கு தூண்டும் விதமாகவும் செயல்படுகின்றனர். எட்டு குற்றவாளிகளையும் காப்பாற்றும் நோக்கத்தோடு ஐஐடி நிர்வாகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
திட்ட அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு வழிகாட்டு பேராசிரியரை அணுகும்போது அவர் பதில் கூற மறுக்கிறார். எப்படி மாணவி பிஎச்டி படிப்பு முடிக்க போகிறார் என தெரியவில்லை. பேராசிரியர்கள் கருடாஸ், எடமன பிரசாத் ஆகிய இருவரும் பாலியலை அனுமதித்தவர்கள். இவர்கள் தான் சமீபத்தில் முன் ஜாமின் பெற்றவர்கள். தமிழக அரசு மற்றும் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்திருக்கிறோம். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: காதலை ஏற்க மறுத்த ஆத்திரத்தில் இளம்பெண்ணு மீது ஆசிட் வீச்சு!