தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் பொறியியல் இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து பிற பருவத்தேர்வு முதல், இரண்டு, மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள், அரியர் வைத்துள்ள முந்தைய ஆண்டுகளில் பயின்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.
தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையினை ஏற்க இயலாது என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடிதம் எழுதி உள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறியதாவது:
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் கடந்த பருவத்தில் தேர்வு எழுத வேண்டிய பாடத்துக்கு மட்டுமே தேர்ச்சி வழங்க, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளை கடைப்பிடித்து நாங்கள் செயல்பட வேண்டியுள்ளது. எனவே விதிமுறைகளை மீறி அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் எழுதிய கடிதம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது எனக் கூறினார்.
இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவின் மின்னஞ்சல் முகவரிக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் தலைவர் அனில் சரஸ்தபுத்தே அனுப்பிய கடிதம் வெளியாகியுள்ளது.
அந்தக் கடிதத்தில், "இறுதி ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு வைக்க வேண்டும். ஏற்கனவே தேர்வு எழுதியவர்களில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு நேரடியாக தேர்ச்சி அளிக்கக்கூடாது. அவர்களுக்கு தேர்வு வைத்து மட்டுமே தேர்ச்சி அளிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் அவ்வாறு தேர்வு வைக்காமல் தேர்ச்சி அளித்தால் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நேரிடும் எனவும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் அரியர் வைத்து உள்ள மாணவர்களுக்கு தேர்ச்சி அளிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'இருமொழி கொள்கை'யைப் பின்பற்ற தமிழ்நாடு அரசு முடிவு: மத்திய அரசுக்கு அமைச்சர் அன்பழகன் கடிதம்!