அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் இன்று (பிப். 25) நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தேர்தலில் மூன்றாவது அணி?
ஜெயலலிதாவின் 'உண்மையான ஆட்சி'யைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்துவதற்குத் தேவையான அனைத்து முடிவுகளையும் மேற்கொள்வதற்கும் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி உள்ளிட்டவற்றை முடிவுசெய்வதற்கு பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு முழு அதிகாரம் வழங்கியும் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுகவை மீட்டெடுக்க சூளுரை
தீயசக்தி கூட்டம் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதைத் தடுத்து தமிழ்நாட்டைக் காக்க வேண்டிய கடமை கழகத்திற்கு இருப்பதை உணர்ந்து அந்தப் போராட்டத்தில் வென்று காட்டவும் அமமுக பொதுக்குழு சூளுரை நிகழ்த்தியுள்ளது.
அமமுக என்னும் ஜனநாயகம் ஆயுதம் கொண்டு தவறான நபர்கள் சுயநலத்தின் சிக்கியுள்ள அதிமுகவை மீட்டெடுத்திடவும், தமிழ்நாடு தலைநிமிர்ந்திடவும், தமிழர் வாழ்வு மலர்ந்திடவும் சசிகலாவின் நல்வாழ்த்துகளோடு செயல்படும் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முதலமைச்சர் அரியணையில் அமரவைக்க தொண்டர்களாக அயராது உழைக்க சூளுரை மேற்கொண்டுள்ளனர்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆகிய பெரும் தலைவர்களின் வழியில் சசிகலாவின் வாழ்த்துகளோடு செயல்படும் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் உண்மைத் தொண்டர்களாகப் பயணிப்போம் என அமமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காக்கும் போராளி டிடிவி
அமமுகவை காக்கும் போராளியாக நின்று துணிச்சலோடு களங்களை எதிர்கொண்டு மக்கள் இதயங்களில் இடம்பிடித்த குக்கர் சின்னத்தைப் பெற்று அத்தனை சவால்களுக்கும் அமமுகவை ஆயத்தமாகி பொதுச்செயலாளர் டிடிவிக்கு நன்றி என்றும், தேர்தல் ஆணையத்தில் பதிவுபெற்ற அரசியல் கட்சியாக கழக சட்டவிதிகளின்படி ஜனநாயக முறைப்படி நடைபெற்ற கழக அமைப்புத் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள் என்றும், அமமுகவின் வளர்ச்சிக்கு ஏற்ப 70 மாவட்ட கழகங்களை 93 கழக மாவட்டகளாக பொதுச்செயலாளர் விரிவுப்படுத்தியதை அங்கீகரித்தல், கரோனா காலத்தில் ஏனைய அரசியல் தலைவர்கள்போல் லாப வேட்டைக்காக யோசிக்காமல் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவிட சிறந்த முறையில் வழிகாட்டிய டிடிவிக்கு பொதுக்குழுக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமமுகவில் புதிய அணிகள்
அமமுகவில் ஏற்கனவே செயல்பட்டுவந்த 20 சார்பு அணிகளுடன் சேர்த்து நவீன யுகத்தில் தேவைக்கு ஏற்ப புதிதாக மூன்று சார்பு அணிகள் உருவாக்கப்பட்டதையும் அதற்கான சட்டவிதிகளை அங்கீகரித்தல், பொதுச்செயலாளர் மேற்கொள்ளப்பட்ட நிர்வாகிகள் நியமனங்களுக்கும் ஒழுங்கு நடவடிக்கைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சசிகலா வரலாறு காணாத வகையில் பெங்களூருவில் இருந்து சென்னை வரை மிகப்பெரிய வரவேற்பு அளித்த கழகத்தினர் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரறிவாளன் முதல் பெட்ரோல் வரை
30 ஆண்டு காலமாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்படுகிறது.
மேலும், நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அதன் விற்பனையை ஜிஎஸ்டி வரியின்கீழ் கொண்டுவர மத்திய அரசுக்கு வலியுறுத்தல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், 11 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்புடன் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பிற மாவட்ட நிர்வாகிகள் காணொலி காட்சி வாயிலாகப் பங்கேற்றனர்.